குருவாயூர் கோயிலில் ரீல்ஸ் விடியோ! ஜஸ்னா சலீம் மீது மீண்டும் வழக்குப்பதிவு!
guruvayur temple reels video issue
குருவாயூர் கோயிலில் ரீல்ஸ் விடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கிய கலைஞர் ஜஸ்னா சலீம் மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயில் தென்னிந்தியாவின் முக்கிய புனித தலங்களில் ஒன்றாகும். நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் இங்கு தரிசனத்துக்கு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிக் பாஸ் பிரபலம் ஜாஸ்மின் ஜாபர், கோயிலின் புனித குளத்தில் கால்களை நனைக்கும் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, கேரள உயர்நீதிமன்றம் கோயில்கள் மற்றும் புனிதத் தலங்களில் ரீல்ஸ் வீடியோக்களை எடுக்கத் தடை விதித்தது. மேலும், இந்துக்கள் அல்லாதவர்களுக்கு குருவாயூரில் நுழைவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பிரபலம் ஜஸ்னா சலீம், சமீபத்தில் கோயில் வளாகத்துக்குள் ரீல்ஸ் விடியோ எடுத்தது மீண்டும் விவாதத்துக்குள்ளாகியுள்ளது. கிருஷ்ணர் தொடர்பான ஓவியங்களையும் கலைப் படைப்புகளையும் அடிக்கடி பகிர்ந்து பிரபலமான இவர், கோயில் பரப்புக்குள் படம் பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, குருவாயூர் தேவஸ்தானம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தது. அந்த புகாரின் பேரில் போலீஸார் ஜஸ்னா சலீம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.
முன்னதாக ஏற்பட்ட சர்ச்சையையும் நீதிமன்ற உத்தரவையும் மீறி நடந்துள்ள இந்தச் சம்பவம், கோயில் நிர்வாகத்தினரிடையிலும் பக்தர்களிடையிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
guruvayur temple reels video issue