குஜராத்: நகைக்கடடையில் மிளகாய் பொடி வீசி கொள்ளை முயற்சி: பலே திருடிக்கு கும்மாங்குத்து!
gujarat cctv viral video
குஜராத்தின் அகமதாபாத்தில் நகைக்கடையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. நவம்பர் 3 அன்று, முகத்தை துப்பட்டாவால் மூடிய பெண் ஒருவர் நகைக்கடையில் நுழைந்து, மிளகாய் பொடி தூவி கொள்ளை முயற்சி செய்துள்ளார்.
சிசிடிவி காட்சியின்படி, அப்பெண் கையில் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை திடீரென கடைக்காரர் மீது தூவுகிறார். ஆனால் பொடி கண்களில் விழாததால் சுதாரித்துக்கொண்ட கடைக்காரர் உடனே எதிர்வினையாற்றி, அந்த பெண்ணை கிட்டத்தட்ட 25 வினாடிகளில் 20 முறை அறைந்துள்ளார்.
திடீர் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெண், கடைக்காரரின் எதிர்ப்பை தாங்க முடியாமல் கடையிலிருந்து தப்பி ஓடியுள்ளார். சம்பவம் முழுவதும் கடையின் சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதும், பலரும் கடைக்காரரின் தைரியத்தையும், திடீர் நடவடிக்கையையும் பாராட்டியுள்ளனர். சிலர் பெண்ணை அடித்தது மீதான விமர்சனங்களையும் பதிவு செய்துள்ளனர்.
கடைக்காரர் போலீசில் புகார் அளிக்க மறுத்திருந்தாலும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அகமதாபாத் போலீசார் திருட முயன்ற அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.
குறிப்பாக, இத்தகைய மிளகாய் பொடி தாக்குதல்களை பயன்படுத்தி கொள்ளை முயற்சிகள் அண்மையில் பல இடங்களில் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடை உரிமையாளர்கள் சிசிடிவி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.