நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
High Court Madurai Bench Central Government
தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினத்தைச் சேர்ந்த அகமது காஜா, பஷீர் அகமது, அகமது அஸ்லாம், முகமது புகாரி, முகமது ரஷீத் உள்பட 19 பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் மனுவில், 2022ல் மத்திய அரசு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (PFI) அமைப்பை தடை செய்ததை எதிர்த்து, அதே ஆண்டு செப்டம்பர் 28 அன்று அதிராமபட்டினம் பேருந்து நிலையம் முன்பு அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறினர்.
முன் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கூறி, அதிராமபட்டினம் போலீசார் அவர்கள்மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 143, 341, 188, 290, 291 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை எதிர்த்து, “போலீசார் அரசியலமைப்பின் வரம்பை மீறி நடவடிக்கை எடுத்துள்ளனர். நாங்கள் பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரத்தின் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என மனுதாரர்கள் வலியுறுத்தினர்.
நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கலந்த ஆசிக் அகமது ஆஜராகி, “போலீசார் எந்தவித முன் விசாரணையும் நடத்தாமல் நேரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது சட்டத்துக்கு புறம்பானது” என வாதிட்டார்.
விசாரணை முடிவில் நீதிபதி கூறியதாவது: “அமைதியான போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. அரசின் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவிப்பதை குற்றமாகக் கருதி வழக்கு பதிவு செய்ய முடியாது. இவ்வாறு வழக்கு பதிந்தால், எந்த குடிமகனும் ஜனநாயக முறையில் தனது கருத்தை வெளிப்படுத்த முடியாது.” என நீதிபதி கண்டித்தார்.
இதனையடுத்து, அதிராமபட்டினத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
English Summary
High Court Madurai Bench Central Government