வரவேற்பு நிகழ்ச்சில் மதுபோதையில் அட்ராசிட்டி செய்த மாப்பிள்ளையின் நண்பர்கள்! பெண்வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு – அதிரடியாக திருமணத்தை நிறுத்திய மணமகள்!
Groom friends commit atrocities while drunk at the reception! A dispute with the bride family the bride abruptly called off the wedding
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த சம்பவம், அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திருமண வரவேற்பு விழா, மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் நடைபெற்றது. மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படித்த இளம்பெண்ணுக்கும், ஓசூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த டிப்ளமோ படித்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு தொடங்கிய அந்த வரவேற்பு விழா, இரவு 9.30 மணி வரை எந்தவித சிக்கலும் இல்லாமல் நடந்தது. இரு குடும்பத்தினரும் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியில் மிதந்தனர்.
ஆனால் 9.30 மணிக்கு பிறகு “டிஜே” ஆட்டம்பாட்டம் தொடங்கியதும் சூழ்நிலை மாறியது. மாப்பிள்ளையின் நண்பர்கள் பலர் மதுபோதையில் மேடைக்கு ஏறி குத்தாட்டம் போடத் தொடங்கினர். அவர்கள் மாப்பிள்ளையையும் மேடையில் ஏற்றி ஆட வைத்தனர்.இதில் மட்டும் திருப்தி அடையாமல், “மணமகளும் மேடைக்கு வந்து ஆட வேண்டும்” என்று சத்தம் போட்டு வற்புறுத்தினர்.
ஆனால், “எனக்கு இதுபோன்று பொது இடங்களில் நடனம் ஆடும் பழக்கம் இல்லை. விருப்பமும் இல்லை” என்று மணமகள் தெளிவாக மறுத்தார். ஆனால் நண்பர்கள் அதை கவனிக்காமல் தொடர்ந்து வற்புறுத்தியதால், மணமகளின் உறவினர்கள் சிலர் முன்வந்து, “எங்கள் வீட்டுப் பெண் அப்படி ஆட மாட்டாள்” என்று கண்டித்தனர்.
இதைக் கேட்ட மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர், “அதைச் சொல்ல நீங்கள் யார்?” என்று சண்டையிட்டு, மணமகளின் உறவினர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர். இருவீட்டாரும் என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளும் முன்பே, மண்டபத்தில் பரபரப்பு அதிகரித்தது.
இதையெல்லாம் பார்த்த மணமகள், மாப்பிள்ளையின் குடிகார நண்பர்களின் அசிங்கமான நடத்தையையும், தனது உறவினர்களை தாக்கியதையும் மனதில் கொண்டு, “இவரை நான் இனி மணக்க மாட்டேன். திருமணத்தை நிறுத்துங்கள்” என்று அதிரடியாக அறிவித்தார்.உடனே, கழுத்தில் அணிந்திருந்த மாலையை கழற்றி எறிந்தார். இதனால் வரவேற்புடன் திருமணமும் நின்றது.
சம்பவத்திற்குப் பிறகு, மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பேனர்கள், அலங்கார வளைவுகள், அலங்கார விளக்குகள் அனைத்தும் இரவோடு இரவாக அகற்றப்பட்டன. இரு வீட்டாரும் தங்களது ஊர்களுக்குத் திரும்பிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேசுபொருளாக மாறி, “மணமகளின் துணிச்சல் நிறைந்த முடிவு” என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
English Summary
Groom friends commit atrocities while drunk at the reception! A dispute with the bride family the bride abruptly called off the wedding