சென்னையில் நேர்ந்த பெரும் சோகம்! கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்...! - மருத்துவ மாணவி பரிதாப பலி...!
great tragedy occurred Chennai car lost control and crashed tree medical student died tragically
சென்னை கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் (47), தனது மனைவி சங்கீதா, மகன் சத்யராஜ், மகள் ஹரிணி (20) மற்றும் உறவினர்களான பிரேமா, லிபியா ஜாய்சி ஆகியோருடன் காரில் வேளாங்கண்ணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது காரை சத்யராஜ் இயக்கி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட செம்பனார்கோவில் – திருவிளையாட்டம் பிரதான சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது பலத்த வேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த ஆறு பேரும் பலத்த காயமடைந்தனர். விபத்து சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஹரிணி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் மருத்துவப் படிப்பின் இரண்டாம் ஆண்டில் பயின்று வந்தது குறிப்பிடத்தக்கது.இந்த துயரச் சம்பவம் குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த ஹரிணியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
great tragedy occurred Chennai car lost control and crashed tree medical student died tragically