தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் மற்றும் இளைஞர்கள் தற்கொலைகள் அதிகரிப்பு: ஆளுநர் ரவி குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ரவி அவர்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றினார். அப்போது, 'தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.'என்று கூறியுள்ளார். ஆளுநர் ஆற்றிய உரையில் மேலும் கூறியுள்ளதாவது: 

நமது இளைஞர்களில் 60 சதவீதம் பேர் அரசு நடத்தும் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். சமூகத்தில் அவர்கள் பெரும்பாலும் வறிய நிலை மற்றும் விளிம்பு நிலையில் இருப்பவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் தரநிலைகள் அதிக வீழ்ச்சியைக் கண்டுள்ளதாகவும், 50 சதவீதத்துக்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் இரண்டு இலக்க கூட்டல்-கழித்தல்களைக் கூட செய்ய இயலவில்லை என்று குறிப்பிட்டுள்ளதோடு, தமிழகத்தில் அரசுப்பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.


அத்துடன், இளைஞர்கள் வேலைவாய்ப்புகளின்றி வெறும்  படிப்புச் சான்றிதழ்களைப் பெற்றவர்களாக அவர்கள் வெளியேறுகிறார்கள். தரமான கல்வி இல்லாத நிலையில், அவர்களால் ஒருபோதும் சமூக மற்றும் பொருளாதார பாகுபாடுகளைக் கடந்து கண்ணியத்துடன் வாழ முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், சமூக மற்றும் பொருளாதார பாகுபாட்டுடன் வாழ்வதே அவர்களின் தலைவிதியாக மாறி வருகிறதாக கவலை தெரிவித்துள்ளார்.

தற்போது, இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தில் அதிகரித்து வருவத்திராது. இது மனதை கலங்கச்செய்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அன்றாடம் 65 தற்கொலைகள் நடப்பதாக, தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார். அதிக எண்ணிக்கையில் நமது மக்கள் தற்கொலை செய்கிறார்கள் என்பதோடு, குழுவாகத் தற்கொலை செய்வதிலும் நமது மாநிலம் அதிக மோசமான நிலையில் இருக்கிறது என்றும் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் சமீபகாலமாக போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் கடுமையாக அதிகரித்துள்ளதாகவும், அவர்கள் கஞ்சாவிலிருந்து ரசாயன போதைப்பொருளுக்கு மாறிவரும் போக்கு நிலவுகிறது என்று பேசியுள்ளார். இவ்வாறு ஆண்டுக்கு ஆண்டு, அதிகரித்து வரும் போதைப்பொருள்கள் பறிமுதல் நடவடிக்கைகள் மிக, மிக அதிகமான கவலையை அளிக்கின்றன என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கொடிய அச்சுறுத்தலை தேவை மற்றும் விநியோகம் என இரு தரப்பிலும் சமாளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதோடு, இதன் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் சக்தி படைத்தவர்கள் செயல்படுவதால் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமீபத்திய ஆண்டுகளில், பாலியல் குற்றங்கள், குறிப்பாக சிறுவர்கள் (போக்சோ) பாலியல் சம்பவங்கள் அதிகரிப்பதைக் காண முடிகிறது. 2024-ஆம் ஆண்டில் 56 சதவீத அளவுக்கு போக்சோ வழக்குகள் அதிகரித்தன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை சம்பவங்கள் 33 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன என்று அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நமது சகோதரிகளும், மகள்களும் தங்களின் வீட்டை விட்டு வெளிவர அச்சப்பட்டும் பாதுகாப்பற்றவர்களாகவும் உணர்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்கள், வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்பட்டால், அது நமது எதிர்காலத்தின் மீது இருண்ட நிழலைப் படரச்செய்து விடும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகளில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது, வருந்தத்தக்கது மற்றும் இரும்புக்கரம் கொண்டுகடுமையாக ஒடுக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் ரவி ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Governor Ravi alleged that drug use sexual crimes and youth suicides have increased in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->