பெண் ஊழியர்களுக்கு செம நியூஸ்! 'மாதவிடாய் கால விடுப்பு வழங்குங்க'...! – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி பரிந்துரை!
Good news female employee Provide menstrual leave Madras High Court recommends action Tamil Nadu government
தமிழகத்தில் பணிபுரியும் பெண்களின் உடல்நலம் மற்றும் நலனை கருத்தில் கொண்டு, மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு பரிந்துரைத்துள்ளது. மேலும், இந்தச் சலுகை நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மட்டுமின்றி, கூலி வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் பயனளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது,"தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள், மாதவிடாய் காலங்களில் கடுமையான உடல் வலியையும், அசௌகரியங்களையும் எதிர்கொள்கின்றனர்.
இருந்தபோதிலும், அந்த வலியையும் பொருட்படுத்தாமல் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாய சூழல் பல பெண்களுக்கு உள்ளது.இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டபோது, தமிழகத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் கால விடுப்பு வழங்குவதற்கான தனிப்பட்ட கொள்கை எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை உருவாக்க மாநிலங்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், மாதவிடாய் கால விடுப்பு தொடர்பான கொள்கையை உருவாக்குவது பெண்களின் நலனுக்கான முக்கிய நடவடிக்கையாகும்.
எனவே, தமிழகத்தில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவில் ஒரு குழுவை அமைக்க வேண்டும். மேலும், பெண்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு முழு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் கால விடுப்பு வழங்குவது தொடர்பான கொள்கையை அரசு உருவாக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கர்நாடகம், பீகார், கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இதுபோன்ற நடைமுறையை தமிழகத்திலும் செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் தற்போது பல்வேறு துறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், மனுதாரரின் கோரிக்கை குறித்து அரசு உரிய ஆலோசனை நடத்தலாம் எனத் தெரிவித்தனர்.
நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மட்டுமின்றி, கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பெண்களும் பயனடையும் வகையில் அரசு ஒரு விரிவான முடிவை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.இதுதொடர்பாக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து தொழிலாளர் நலத்துறை செயலாளர் வரும் 28-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
English Summary
Good news female employee Provide menstrual leave Madras High Court recommends action Tamil Nadu government