பொங்கலுக்கு முன் நற்செய்தி...! பரிசு தொகுப்பு டோக்கன் 2 நாட்களில் வழங்கல்...!
Good news before Pongal Gift package tokens distributed 2 days
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகுப்பு எப்போதும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஒன்று. வழக்கமாக இந்தப் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுவதுடன், சில ஆண்டுகளில் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு வந்தது.
குறிப்பாக 2022-ம் ஆண்டு ரூ.2,000 ரொக்கம் வழங்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் பணம் வழங்கப்படாமல், அரிசி, சர்க்கரை, கரும்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களே வழங்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், 2026-ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் மீண்டும் ரொக்கப் பணம் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. இதற்கிடையே, “பொங்கல் பரிசு தொகுப்பு – 2026” என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட டோக்கன்கள் தயாராகி, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது,"இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களான அரிசி, சர்க்கரை உள்ளிட்டவை ஏற்கனவே கிடைத்துவிட்டன. பொங்கல் பரிசுத் தொகுப்பில் சேர்க்கப்படும் மற்ற பொருட்கள் இன்னும் 2 நாட்களுக்குள் வந்துவிடும்.
அதேபோல், இலவச வேட்டி–சேலைகளும் ரேஷன் கடைகளுக்கு வந்து சேர்ந்துள்ளன.நேற்று டோக்கன்கள் கிடைத்துள்ளன. அந்த டோக்கன்களில் ரேஷன் கடையின் பெயர், எண், டோக்கன் எண், பயனாளியின் பெயர், ரேஷன் அட்டை எண், கிராமம், தெரு, பரிசு வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் போன்ற விவரங்கள் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளன.
இந்த டோக்கன்கள் 2 அல்லது 3 நாட்களுக்குள் நேரடியாக ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். பரிசுத் தொகுப்பு பெற வரும் போது அந்த டோக்கன் திரும்ப பெறப்படும்.
ஏதேனும் காரணத்தால் டோக்கன் பெறாதவர்கள், பரிசு வாங்க வரும் போது தேவையான விவரங்களை நிரப்பி வழங்கலாம். இதன் மூலம் ஒரு ரேஷன் கார்டுதாரரும் விடுபடாமல் அனைவருக்கும் பொங்கல் பரிசு கிடைப்பது உறுதி செய்யப்படும்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொங்கலை முன்னிட்டு அரசின் இந்த ஏற்பாடுகள், பொதுமக்களிடையே எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் மேலும் அதிகரித்துள்ளது.
English Summary
Good news before Pongal Gift package tokens distributed 2 days