முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு சிக்கல்...! நில அபகரிப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு...! - நீதிமன்றம் அதிரடி...!
Former Minister Ma Subramanian trouble Charges filed land grabbing case Court takes action
சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில் உள்ள நிலம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அடுத்தகட்ட விசாரணைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கிண்டி தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு சிட்கோ சார்பில் ஒதுக்கப்பட்ட நிலம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலத்தை மா.சுப்பிரமணியன் சென்னை மாநகர மேயராக பதவி வகித்த காலத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றியதாக சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீது மோசடி, கூட்டுச்சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.சி.ஐ.டி. காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து, இந்த வழக்கு சென்னையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய் பாபா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.அப்போது, இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்து விளக்கினார்.
இதற்கு பதிலளித்த மா.சுப்பிரமணியன் மற்றும் காஞ்சனா, தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்தனர். தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்டமாக சாட்சிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.சாட்சி விசாரணை வருகிற 31-ந்தேதி நடைபெறும் என அறிவித்த நீதிபதி, அதுவரை வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.நிலம் பெயர் மாற்றம் தொடர்பான இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளதால், 31-ந்தேதி நடைபெறும் சாட்சி விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
English Summary
Former Minister Ma Subramanian trouble Charges filed land grabbing case Court takes action