"MLA ஷாப்பிங்கில் இருக்கும் முதலமைச்சருக்கு மக்கள் படும் துயரம் தெரியுமா?" - விலைவாசி உயர்வு குறித்து ஸ்டாலின் கடும் விமர்சனம்!
Former CM MK Stalin Slams CM Vijay Over Rising Prices and Economic Decline Accuses Government of Focusing on MLA Shopping Over Governance
தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை மற்றும் ஆட்சிக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தவெக தலைமையிலான அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்யைக் கடுமையாக விமரிசித்துள்ளார்.
"மளிகைக் கடையில் ஷாப்பிங் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு":
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின் இடையே அங்குள்ள மளிகைக் கடை ஒன்றில் ஆய்வு செய்ததாகக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், "எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் 'MLA Shopping'-இல் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, சாதாரண மக்கள் மளிகைக் கடையில் கூட பொருட்கள வாங்க முடியாமல் தவிப்பது தெரியுமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 4 மாத கால தவெக ஆட்சியில் அன்றாடச் சமையலுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவுக்கு உயர்ந்து குடும்பங்கள் விழிபிதுங்கி நிற்பதாகவும், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' பார்த்தால் மக்களின் வயிறு நிறைந்துவிடாது என்றும் சாடியுள்ளார்.
பொருளாதாரச் சரிவு & 'Guidance TN' வல்லுநர்கள் வெளியேற்றம்:
திராவிட மாடல் ஆட்சியின் போது இந்திய அளவிலான பொருளாதார மந்தநிலையிலும் தமிழ்நாடு ஏறுமுகத்தில் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தவெக ஆட்சியில்:
இந்தியா முழுவதும் ஜி.எஸ்.டி. (GST) வருவாய் உயர்ந்து வரும் நிலையில், கடந்த 3 மாதங்களாகத் தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி. வருவாய் சரிவைச் சந்தித்து வருகிறது.
தவெக அரசு "வேலைக்கு ஆகாத அரசு" என்ற முடிவுக்கு வந்து, தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான 'Guidance TN'-இல் பணியாற்றிய அனுபவமிக்க வல்லுநர்கள் பிற மாநிலங்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டினார்.
"எல்லாவற்றிலும் 'வெற்றி' ஸ்டிக்கர்":
பொருளாதாரம், விலைவாசி, மின்சாரம், தொழில்துறை, சட்டம்-ஒழுங்கு, மருத்துவம் மற்றும் பால்வளம் என அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வேகமான வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்த மு.க.ஸ்டாலின், நிர்வாகச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தாமல் "விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம்" என்பது போல எல்லா திட்டங்களுக்கும் 'வெற்றி' என ஸ்டிக்கர் ஒட்டினால் போதும் என நினைக்கும் அரசிடம் மாட்டி மக்கள் தவித்து வருவதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Former CM MK Stalin Slams CM Vijay Over Rising Prices and Economic Decline Accuses Government of Focusing on MLA Shopping Over Governance