வலைகளுடன் தயாரான மீனவர்கள்...! இன்ஜின்களை ஸ்டார்ட் செய்து செக் பண்ணிய விசைப்படகுகள்...! - நாளை முதல் என்ன நடக்கப்போகிறது...?
Fishermen ready nets Motorboats engines started and checked What going happen from tomorrow
மீன்களின் இனப்பெருக்கத்தை பாதுகாக்கும் நோக்கில் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் ஆண்டுதோறும் அமல்படுத்தப்படும் 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைய உள்ளதால், தூத்துக்குடி கடற்கரை கிராமங்கள் மீண்டும் பரபரப்பான சூழலை எட்டியுள்ளன.
கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருந்த இந்த தடைக்காலத்தின் காரணமாக, விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிப்பதற்கு முழுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம், வேம்பார், தருவைகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 545-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.தடைக்கால விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர் பிரதிநிதிகள், காவலர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் இணைந்து சிறப்பு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
குறிப்பாக வெளிமாநில மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பதைத் தடுக்க கடற்பரப்பில் தொடர்ந்து கூட்டு ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.இந்நிலையில், நாளையுடன் தடைக்காலம் நிறைவடைவதால் மீனவ கிராமங்களில் மீண்டும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.
சுமார் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கடலுக்குள் பயணிக்கவுள்ள மீனவர்கள் தீவிர முன்னேற்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தடைக்காலம் முழுவதும் தங்களது விசைப்படகுகளை முழுமையாக சீரமைத்த மீனவர்கள், இயந்திரப் பழுதுகளை சரிசெய்தல், வலைகளை புதுப்பித்தல், புதிய வலைகளை தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.
தற்போது கடலுக்குச் செல்லும் இறுதிக்கட்ட பணிகளாக படகுகளில் எரிபொருள் நிரப்புதல், உணவுப் பொருட்கள் சேமித்தல் மற்றும் வலைகளை ஏற்றுதல் போன்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
நேற்று முதல் பல பகுதிகளில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடலுக்குள் இயக்கி சோதனைப் பயணங்களையும் மேற்கொண்டனர். இயந்திரங்கள் சீராக செயல்படுகிறதா, கடல்பயணத்திற்கு அனைத்து வசதிகளும் தயாராக உள்ளனவா என்பதை உறுதி செய்யும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.
61 நாட்கள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு மீண்டும் கடலுக்குள் செல்லும் தருணம் நெருங்கி வருவதால் மீனவர்களிடையே மிகுந்த உற்சாகம் நிலவுகிறது. தடைக்காலத்திற்குப் பிறகு கடற்பரப்பில் மீன் வளம் அதிகரித்திருக்கும் என்பதால், இந்த முறை சிறப்பான மீன்பிடி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலை நோக்கி தயாராகி வருகின்றனர்.
இவ்வாறு மீன்பிடித் தடைக்காலம் நிறைவடையும் நிலையில், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார கடலோரப் பகுதிகளில் மீன்பிடித் தொழில் மீண்டும் முழு வீச்சில் தொடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
English Summary
Fishermen ready nets Motorboats engines started and checked What going happen from tomorrow