அப்பா, என்னை இவங்ககிட்ட இருந்து கூட்டிட்டுப் போயிடுங்க...! - கோவையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து 6 வயது மகனை அடித்துக் கொன்ற தாய்க்குத் தண்டனை உறுதி...!
Father take me away from these people Mother sentenced beating and killing 6 year old son Coimbatore drug dealer
கோவை சாய்பாபா காலனி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த திவ்யா (32), தனது 6 வயது மகன் அபிஷேக் மற்றும் 3 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்த அவர், அட்டைபெட்டி தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநரான ராஜதுரை (35) என்பவருடன் திவ்யாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த பழக்கம் முறைகேடான உறவாக மாறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜதுரை அடிக்கடி திவ்யாவின் வீட்டிற்கு வந்து சென்ற நிலையில், குழந்தைகள் தங்களது உறவுக்கு தடையாக இருப்பதாக இருவரும் கருதியதாக கூறப்படுகிறது.

இதனால் இரண்டு குழந்தைகளும் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், குறிப்பாக அபிஷேக் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. ஒருகட்டத்தில் பள்ளிக்கு வந்திருந்த தனது தந்தையிடம், தாயாரும் வீட்டிற்கு வரும் நபரும் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறி, தன்னை அழைத்துச் செல்லுமாறு சிறுவன் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அப்போது புதிய வீட்டு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தவுடன் மகனையும் மகளையும் தன்னுடன் அழைத்துச் செல்வதாக அவரது தந்தை ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது.இதற்கிடையில், கடந்த 19.04.2020 அன்று அப்பகுதியில் உள்ள ஒரு கடை அருகே அபிஷேக்கை திவ்யாவும் ராஜதுரையும் குச்சியால் தாக்கி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். தாக்குதலால் மயங்கி விழுந்த சிறுவன் அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக சாய்பாபா காலனி காவலர்கள் கொலை வழக்குப் பதிவு செய்து திவ்யாவையும் ராஜதுரையையும் கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கை விரிவாக விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றஞ்சாட்டப்பட்ட திவ்யா மற்றும் ராஜதுரை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்தார்.
அவர்களுக்கு வழங்கப்படவுள்ள தண்டனை குறித்த இறுதி விவரம் வருகிற 22-ந்தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
English Summary
Father take me away from these people Mother sentenced beating and killing 6 year old son Coimbatore drug dealer