தூத்துக்குடிக்கு ரூ.38,000 கோடியில் மெகா ஜாக்பாட்...! அதிநவீன கப்பல் கட்டுமான திட்டத்தை அறிவித்தார் முதல்வர் விஜய்...!
Thoothukudi gets mega jackpot 38000 crore Chief Minister Vijay announced state of the art shipbuilding project
தமிழ்நாட்டை உலகளாவிய கடல்சார் தொழில்துறையின் முக்கிய மையமாக மாற்றும் நோக்கில், தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி கப்பல் கட்டுமான நிறுவனமான எச்.டி. ஹுண்டாய் நிறுவனத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜயை சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் எச்.டி. ஹுண்டாய் நிறுவனத்தின் உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் யங் ஹூன் குவான் தலைமையிலான குழுவினர், தூத்துக்குடியில் உருவாக்கப்படவுள்ள பிரம்மாண்ட கப்பல் கட்டுமானத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் செயலாக்க கட்டங்கள் குறித்து முதல்-அமைச்சருடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான மையங்களில் ஒன்றாக உருவாக்கப்பட உள்ள இந்த திட்டத்தில் சுமார் ரூ.38,000 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது. இது இந்திய மதிப்பில் மட்டுமல்லாமல், சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு திட்டமாகவும் கருதப்படுகிறது.
இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பிறகு, சுமார் 15 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில் துணைத் தொழில்கள், உதிரிப்பாக உற்பத்தி மையங்கள், போக்குவரத்து சேவைகள் மற்றும் உள்ளூர் விநியோகச் சங்கிலி அமைப்புகள் மூலம் ஆயிரக்கணக்கான மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாபெரும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், சிப்காட் மற்றும் வ.உ.சி. துறைமுக ஆணையம் இணைந்து தேசிய கப்பல் கட்டுமானம் மற்றும் கனரக தொழில் பூங்கா தமிழ்நாடு நிறுவனம் என்ற சிறப்பு நிறுவனத்தை உருவாக்கியுள்ளன.மேலும், இந்த கப்பல் கட்டுமான வளாகத்தை நிறுவுவதற்கான
முதற்கட்ட கொள்கை ஒப்புதலையும் இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்திடமிருந்து பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சந்திப்பின்போது திட்டத்தின் தற்போதைய முன்னேற்ற நிலை, எதிர்கால செயல் திட்டங்கள், முதலீட்டு கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து நிறுவன நிர்வாகிகள் முதல்-அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் தூத்துக்குடியிலேயே இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தினர்.
அப்போது பேசிய முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு விரிவாக்கத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டம் விரைவாக நடைமுறைக்கு வர தேவையான அனைத்து நிர்வாக மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவுகளையும் மாநில அரசு வழங்கும் என உறுதியளித்தார்.
மேலும் திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தேவையான அனுமதிகள் மற்றும் வசதிகளை துரிதமாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து எச்.டி. ஹுண்டாய் நிறுவன நிர்வாகிகள், தூத்துக்குடியில் கப்பல் கட்டுமானத் தளத்தை மிக விரைவில் உருவாக்கும் நோக்கில் அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர்.
இந்த முக்கிய சந்திப்பில் தொழில்துறை அமைச்சர் ச.கீர்த்தனா, தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.விஜயகுமார், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தா.கார்த்திகேயன், சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சி.அ.ராமன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் எச்.டி. ஹுண்டாய் நிறுவனத்தின் உலகளாவிய வணிகப் பிரிவு குழுத் தலைவர் சன்ஜூன் ஹோங், மூத்த மேலாளர் ஹோங் சியோல் கிம், குழுத் தலைவர் கிவான் லீ மற்றும் பல்வேறு உயர் நிர்வாக அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்த மாபெரும் முதலீட்டு திட்டம் நடைமுறைக்கு வந்தால், தூத்துக்குடி இந்தியாவின் முன்னணி கடல்சார் தொழில்துறை மையமாக உருவெடுப்பதோடு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்றுமதி திறன் விரிவாக்கத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Thoothukudi gets mega jackpot 38000 crore Chief Minister Vijay announced state of the art shipbuilding project