ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் – பெரிய மிஸ்.. ஓபனாக சொன்ன மனைவி லதா!
It would have been even better if Rajini had entered politics a Wife Latha speaks openly
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் பின்வாங்கிய முடிவு மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது. சமீபத்தில், “2021-ல் அரசியலுக்கு வந்திருந்தால் கண்டிப்பாக வென்றிருப்பேன்” என்று ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் அளித்த பேட்டி தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை அவரது ரசிகர்களிடையே 1990-களிலிருந்தே இருந்து வந்தது. 1996-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-தமாகா கூட்டணிக்கு அவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த கூட்டணி வெற்றி பெற்றது. இதனால், ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களிடையே அதிகரித்தது.
பின்னர், 2017-ஆம் ஆண்டு ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “நான் அரசியலுக்கு வருவது உறுதி. சிஸ்டத்தை மாற்ற வேண்டும். எனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும்” என்று அறிவித்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து, அவர் அடுத்த முதலமைச்சராக வருவார் என்ற எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினர்.
ஆனால், உடல்நலக் காரணங்கள் மற்றும் கொரோனா கால சூழ்நிலையை சுட்டிக்காட்டி, பின்னர் அரசியலுக்கு வரமாட்டேன் என்று ரஜினிகாந்த் அறிவித்தார். இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த லதா ரஜினிகாந்த், ரஜினி அரசியலுக்கு வராதது குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “ரஜினிகாந்த் ஒரு பெரிய தலைவர். அவர் அரசியலுக்கு வராதது மிகப்பெரிய மிஸ். அவர் வரவில்லை என்பதற்காக மட்டும் நான் வருத்தப்படவில்லை. அவர் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அவருக்குள் நிறைய திட்டங்களும் கனவுகளும் இருந்தன” என்றார்.
மேலும், “கொரோனா காலத்தில் அப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அவருக்கு தெளிவான பார்வை இருந்தது. சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ செய்தது போல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று அவர் நினைத்திருந்தார். அவரது விஷன் என்ன என்பது எனக்குத் தெரியும். ஒரு பெரிய தலைவரை நாம் தவறவிட்டுவிட்டோம்” என்றும் லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.
லதா ரஜினிகாந்தின் இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களிலும், அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் தமிழக அரசியல் களம் எப்படி மாறியிருக்கும் என்ற கேள்வியும் மீண்டும் எழுந்துள்ளது.
English Summary
It would have been even better if Rajini had entered politics a Wife Latha speaks openly