விபத்தா...? திட்டமிட்ட கொலையா...? மணல் கொள்ளையை தடுக்க முயன்ற தலைமை காவலர் உயிரிழந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம்...!
Accident Planned murder dramatic twist case death head constable trying prevent sand robbery
ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் கொள்ளையைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின்போது, விபத்தில் சிக்கி தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தையும் பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேவிபட்டினம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் மகேஷ்குமார், இன்று நள்ளிரவு கோப்பேரிமடம் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது மணல் கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்த அவர், அதனை மணலுடன் தேவிபட்டினம் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுகொண்டிருந்தார்.பெருவயல் பகுதியில் சென்றபோது, ராமநாதபுரத்திலிருந்து வேளாங்கண்ணி நோக்கிப் பயணித்த அரசு விரைவு பேருந்து, டிராக்டரின் பின்புறம் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்ததுடன், அதனை இயக்கிய தலைமை காவலர் மகேஷ்குமார் வாகனத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தத் தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தேவிபட்டினம் காவலர்கள், அவரது உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மணல் கொள்ளையை ஒடுக்குவதற்காக அச்சமின்றி களத்தில் இறங்கி கடமையாற்றிய வேளையில் தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவு செய்தியை அறிந்த சக காவலர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர்.
அவரது உடலைக் கண்டு கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களின் கண்களையும் கலங்கச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.கடமையை உயிரினும் மேலாக மதித்து செயல்பட்ட காவலரின் உயிரிழப்பு, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Accident Planned murder dramatic twist case death head constable trying prevent sand robbery