திமுக ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடி கடன்...தவெகவின் வெள்ளை அறிக்கை திசைதிருப்பும் செயலா...? - வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி - Seithipunal
Seithipunal


பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் நிதி நிலை, கடன் சுமை மற்றும் வெள்ளை அறிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,"தமிழ்நாடு அரசின் கடந்த ஐந்து ஆண்டுகால நிதி செயல்பாடுகள் மற்றும் பொருளாதார நிலவரங்களை விளக்கும் வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் கடந்த 16-ந்தேதி வெளியிட்டுள்ளார்.

கடந்த 2021 முதல் 2026 வரையிலான தி.மு.க. ஆட்சிக்காலத்தில், அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிதியமைச்சர்களாக செயல்பட்ட பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு ஆகியோர் தமிழ்நாடு நிதி மேலாண்மையில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்வதாகவும், பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தொழில், கல்வி, வர்த்தகம் மற்றும் மனிதவள மேம்பாட்டில் தமிழ்நாடு தனித்துவமான வளர்ச்சிப் பாதையை உருவாக்கிய மாநிலமாக இருந்து வருகிறது. தமிழர்களின் உழைப்பு, தொழில்முனைவு திறன், புதுமை சிந்தனை மற்றும் அறிவுசார் பங்களிப்புகளே இந்த வளர்ச்சியின் அடித்தளமாக அமைந்துள்ளன.

ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் வளர்ச்சியை விட கடன் சுமை அதிகரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். கல்வி, சுகாதாரம், மெட்ரோ ரயில், மேம்பாலங்கள், சாலை வசதிகள் போன்ற நீண்டகால உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கடன் பெறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது.

ஆனால் பெறப்பட்ட நிதி பெருமளவில் இலவசத் திட்டங்கள், விளம்பர செலவுகள் மற்றும் பயனற்ற நிர்வாக நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.மேலும், நிர்வாகத்தின் பல்வேறு நிலைகளில் ஊழல் பரவலாக இருந்ததால், மாநிலத்தின் நிதிச்சுமை தொடர்ந்து அதிகரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பலமுறை சட்டப்பேரவையில் மாநில நிதிநிலை, வருவாய் பற்றாக்குறை மற்றும் கடன் உயர்வு குறித்து கேள்வி எழுப்பியதாகவும், அதுகுறித்து விவாதிக்க முயன்றபோதெல்லாம் அமைச்சர்கள் பல்வேறு புள்ளிவிவரங்களை முன்வைத்து உண்மையான விவாதத்தை தவிர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் உண்மை நிதிநிலையை வெளிப்படுத்தும் வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்திய போதிலும், முந்தைய அரசு அதனை பொருட்படுத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்ற 37-வது நாளிலேயே வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மின்வாரியம், போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் இணைத்துப் பார்த்தால், தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ.13 லட்சத்து 18 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு புதிய கடன்கள் பெறப்பட்டுள்ளதாகவும், தற்போது மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் பங்காக ரூ.1,28,934 கடன் சுமை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நிதியமைச்சர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான தகவல்கள் ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் அறியப்பட்டவையே என்றும், தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட சில முக்கிய திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதன் காரணமாக மக்கள் மத்தியில் அதிருப்தியும் ஏமாற்ற உணர்வும் அதிகரித்து வருவதாகவும், அந்த சூழலை திசைதிருப்பும் முயற்சியாகவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இருப்பினும் மாநிலத்தின் உண்மையான நிதிநிலை மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.வெள்ளை அறிக்கை என்பது வெறும் ஆவணமாக மட்டுமே இருந்து விடாமல், அதில் சுட்டிக்காட்டப்பட்ட சவால்களுக்கு தீர்வு காணும் செயல்திட்டங்களும் அமல்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள வருவாய் பற்றாக்குறையை குறைப்பதற்கும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயை உயர்த்துவதற்கும் அரசு எவ்வகையான திட்டங்களை வகுத்துள்ளது என்பதை வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தி ஊழலை கட்டுப்படுத்தினால், மணல் மற்றும் கனிமவள வளங்கள் தொடர்பான முறைகேடுகளை தடுத்து ஒழுங்குபடுத்தினால், பொதுத்துறை நிறுவனங்களை திறம்பட நிர்வகித்தால் மற்றும் கடன் நிதியை உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தினால் மாநிலத்தின் நிதிநிலை கணிசமாக மேம்படும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் வருவாய் பற்றாக்குறை குறைவதுடன், கடன் சுமையும் படிப்படியாக தணியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஆட்சியின் தொடக்க கட்டத்திலேயே வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ள தவெக அரசு, இனி ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் நிதிநிலை முன்னேற்றம், கடன் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் குறித்த முழுமையான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அப்போதுதான் தற்போது வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கைக்கு உண்மையான அர்த்தமும் பயனும் கிடைக்கும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 lakh crore debt under DMK rule Is Tvk white paper diversionary act Vanathi Srinivasan questions barrage


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->