மீன் கழிவு ஆலைகளை உடனடியாக மூட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்!
Fish waste treatment plants should be closed immediately Seeman insists
விதிகளை மீறிய ஆலைகளின் உரிமம் பறிக்கப்பட்டுக் கடும் நடவடிக்கை எடுத்திடவும் வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்திற்கு உட்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு ஆலைகளை மூடிடக் கோரி கடந்த 400 நாட்களுக்கும் மேலாக பல்வேறு வகையான போராட்டங்களில் கிராம பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் கழிவுகள் காரணமாக காற்று மாசுபாடு, நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் வேளாண் நிலங்களின் பாதிப்பு ஆகிய சீரழிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், கிராம மக்கள் உடல்நலக் குறைவுகளை எதிர்கொள்கின்றனர்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிகளின்படி, மீன் மற்றும் மீன் பொருட்கள் 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் குளிர்பதனக் கிடங்குகளில் சேமிக்கப்பட வேண்டும். மேலும், கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதவாறு மூடப்பட்ட கொள்கலன்களில் அகற்றப்பட வேண்டும். ஆனால்,தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதிக்காப்பதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆலைகளை எதிர்க்கும் விதமாகத் தொடர்ந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கிராமசபைக் கூட்டம் நடத்தினால், மீன் கழிவு ஆலைகளை மூடக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனும் அச்சத்தால் பொட்டலூரணியில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை.
முதலில் இந்த ஆலைகளை உடனடியாக மூடிட வேண்டும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து ஆலைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து, உணவு பாதுகாப்பு விதிகள் மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளில் ஏற்பட்ட மீறல்கள் குறித்து ஆய்வு செய்திடவும் விதிகளை மீறிய ஆலைகளின் உரிமம் பறிக்கப்பட்டுக் கடும் நடவடிக்கை எடுத்திடவும் வேண்டும் என்று இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
English Summary
Fish waste treatment plants should be closed immediately Seeman insists