கன்னியாகுமரி சின்னமுட்டம் துறைமுகத்தில் விசைப்படகு தீ விபத்து: ரூ.1.25 கோடி மதிப்பிலான படகு எரிந்து சாம்பல்; 20 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில், சுமார் 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகு ஒன்று தீ விபத்தில் சிக்கி முழுமையாக எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 61 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் உற்சாகமாகத் தொழிலுக்குத் திரும்பிய இரண்டாம் நாளில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சின்னமுட்டம் துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் நடைமுறையில் இருந்த மீன்பிடி தடைக்காலம் ஜூன் 13 நள்ளிரவோடு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தொடங்கினர். முதல் நாளில் 298 படகுகள் சென்று நல்ல லாபத்துடன் திரும்பிய நிலையில், இன்று அதிகாலை இரண்டாம் நாள் தொழிலுக்காக மீனவர்கள் தயாராகினர்.

அதிகாலை சுமார் 5 மணி அளவில், சின்னமுட்டம் சிங்காரவேலன் தெருவைச் சேர்ந்த டென்சன் என்பவருக்குச் சொந்தமான 'கப்பல் மாதா' என்ற விசைப்படகில் 20 மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தயாராகினர். படகை ரவீண்டன் என்பவர் இயக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாகப் படகின் பேட்டரி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. தீ மளமளவெனப் பரவியதால், படகில் இருந்த 20 மீனவர்களும் உடனடியாகக் கடலில் குதித்து நீந்தி கரை வந்து சேர்ந்து உயிர் தப்பினர்.

அதிகாலை நேரத்தில் பலத்த காற்று வீசியதால் படகு முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னியாகுமரி தீயணைப்புத் துறையினர், தீயணைப்பு அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். இருப்பினும், சுமார் 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த விசைப்படகு முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.

தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால், துறைமுகத்தில் அருகருகே நிறுத்தப்பட்டிருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மற்ற விசைப்படகுகளுக்குத் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து டி.எஸ்.பி ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ பெருமாள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் வந்து தீவிர விசாரணை நடத்தினர். மீன்பிடித் தொழில் மீண்டும் களைகட்டத் தொடங்கிய நேரத்தில் நடந்த இந்த விபத்து சின்னமுட்டம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fire at Kanyakumari Chinnamuttam Harbor Fishing Boat Worth 1 Crore Destroyed 20 Fishermen Escape


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->