விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்..ஜி.கே. வாசன் கோரிக்கை!
Farmers should be compensated for their losses GK Vasans demand
மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பாதிப்புக்கு ஏற்ப நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-தமிழக அரசின் கவனமின்மையால், மெத்தனப்போக்கால்கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட ஒரு லட்சம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்தது மிகவும் வேதனைக்குரியது. தமிழக அரசு, நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை தொடர் கண்காணிப்பு மூலம் நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு உதவிக்கரமாக செயல்பட வேண்டும்.
சுமார் 1 லட்சம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமுற்றன. கொள்முதல் செய்த நெல்மூட்டைகளை பாதுகாத்தோ அல்லது குடோனுக்கு கொண்டு சென்றோ மூடி பாதுகாத்திருக்க வேண்டும். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம், அரியலூர் என டெல்டா மாவட்டப் பகுதிகளில் பல இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல்முட்டைகளை அவ்வப்போதே கொள்முதல் செய்யாமல் தேக்கமடைவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இப்படி அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவது வாடிக்கையாகிவிட்டது
குறிப்பாக மழைக்காலங்களிலும், சரி, வெயில் காலங்களிலும் சரி நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் முறையாக, சரியாக நெல்கொள்முதல் செய்யப்படுவதும் இல்லை, கொள்முதல் செய்த நெல்மூட்டைகளை குடோனுக்கு கொண்டுசென்று பாதுகாப்பதிலும் காலதாமதம் ஆகிறது.
இதற்கெல்லாம் காரணம் போதிய நெல்கொள்முதல் நிலையங்களில் தார்பாய்கள் இருப்பில் இருப்பதில்லை, சில இடங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை, கொள்முதல் செய்வதில் காலதாமதம் போன்றவற்றால் கடினமாக உழைத்து பயிரிட்டு, அறுவடை செய்யும் விவசாயிகள் தான் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தமிழக அரசு உடனடியாக தமிழகம் முழுவதும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு நெல்மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்வதையும், கொள்முதல் செய்த நெல்மூட்டைகளைப் பாதுகாப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மேலும் தமிழக அரசு தற்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பாதிப்புக்கு ஏற்ப நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
English Summary
Farmers should be compensated for their losses GK Vasans demand