மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம்! அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்!
Farmers rail protest condemn central government
கர்நாடகா அரசு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்காததால் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குருவை பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வாடுகின்றன.
இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். மேலும் விவசாய சங்கங்கள், டெல்டா மாவட்டத்திற்கு உரிய நீரை வழங்க வேண்டும் என்றும் கர்நாடகா மற்றும் காவிரி நீர் பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று காலை தஞ்சாவூர், திருவாரூர், சீர்காழி, நாகப்பட்டினம் ஆகிய 4 இடங்களில் விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூரில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு மாநில தலைவர் தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு, கருகி வரும் பயிர்களை காப்பாற்ற உடனடியாக நீரை வழங்க வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தை முடக்கக் கூடாது. மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர்.
ஆனால் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் விவசாய சங்க நிர்வாகிகளை கைது செய்தனர்.
இதேபோல் திருவாரூர் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் விவசாயிகள் நின்று கொண்டு பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் ரயில்வே போலீசார், மற்றும் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள், விவசாயிகளை உடனடியாக கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து ரயில் புறப்பட்டு சென்றது.
English Summary
Farmers rail protest condemn central government