ஃபென்ஜால் புயல் பாதிப்பு! 18 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்டத்தை சேர்ந்த 5,18,783 விவசாயிகளுக்கு ரூ. 498.80 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில்  கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஃபென்ஜால் புயலின் காரணமாக வரலாறு காணாத அதிகனமழை பொழிவு ஏற்பட்டு கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, வீடுகள், சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் பெரும் சேதமடைந்து, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களும் பாதிக்கப்பட்டது.  

தமிழ்நாடு அரசு “ஃபென்ஜால்” புயலை“ கடுமையான இயற்கை பேரிடர்” என்று அறிவித்த்தோடு, தமிழ்நாடு அரசின் வேண்டுகோளுக்கிணங்க, மத்திய அரசும் ஃபென்ஜால் புயலை கடுமையான இயற்கை பேரிடராக அறிவித்தது.

முதல்வர் ஸ்டாலின், ஃபென்ஜால் புயலால் பாதிப்பிற்குள்ளான மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்து, போர்க்கால அடிப்படையில் மேற்கொண்ட துரித மீட்பு நடவடிக்கைகளினால்  ஃபென்ஜால் புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. 

ஃபென்ஜால் புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும், ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக ரூ. 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலினால் 3.12.2024 அன்று உத்தரவிடப்பட்டு, வழங்கப்பட்டது. 

மேலும், புயலால் பாதிப்பிற்குள்ளான உள்கட்டமைப்புகளை உடனடியாக சீரமைக்க பல்வேறு துறைகளுக்கு ரூ. 80 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவித்தும், சீரமைப்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. 

அத்துடன், விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை கணக்கெடுத்து, மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500/-, நெற்பயிர் மற்றும் பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17,000/-, நீண்டகாலப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22,500/- நிவாரணம் என்ற அடிப்படையில் விரைந்து நிவாரணம் வழங்கிடவும் உத்தரவிட்டார். 

அதன்படி, ஃபென்ஜால் புயலால் சேதமடைந்த பயிர்கள் குறித்து முறையாக கணக்கெடுக்கப்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், செங்கல்பட்டு, தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், இராணிப்பேட்டை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 3.23 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு மொத்தம் 5,18,783 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ. 498.80 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட முதல்வரால் உத்தரவிடப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த நிவாரணத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஓரிரு நாள்களில் வரவு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fangal Cyclone CM Stalin TNGovt Relief Fund


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->