மதம், சாதிய ரீதியாக வெறுப்பு பேச்சுக்கு எதிராக சட்டம்; மீறினால் சிறைத்தண்டனை; கர்நாடக சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்..!
A bill against hate speech based on religion and caste has been passed in the Karnataka Legislative Assembly
கர்நாடக சட்டமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில், மதம் மற்றும் சாதிய ரீதியாக வெறுப்பைப் பரப்பி இருதரப்பினர் இடையான சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பேசுவது மற்றும் எழுதுவது ஆகியவற்றை குற்றமாக்கி கர்நாடக அரசு சட்டம் இயற்றியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அஷ்ரஃப் என்ற முஸ்லிம் நபர் அடித்துக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, கடலோர கர்நாடகாவில் தொடரும் வகுப்புவாதக் கொலைகளைத் தடுக்கும் விதமாகவும் இந்த சட்டத்தை கர்நாடக அரசு கொண்டு வந்துள்ளது.
கடந்த டிசம்பர் 10ஆம் தேதியன்று 'வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் தடுப்பு மசோதா 2025, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மதம், இனம், சாதி அல்லது சமூகம், பாலினம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி, என எவை வைத்தும் ஒருவரை இழிவாகப் பேசினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவர் என்று கூறப்பட்டது.

குறித்த மசோதா இந்துக்களை குறிவைத்து இயக்கப்பட்டது என்றும், இந்தச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கக்கூடும் எனவும், அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இருப்பினும் நேற்று இந்த சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா குறித்து, கர்நாடக சட்டப்பேரவையில் விளக்கிப் பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா கூறியதாவது: சமீப காலங்களில், சமூகத்தைப் புண்படுத்தும் கருத்துகளை பலரும் தெரிவித்து வருகின்றனர். அத்துடன், இந்தப் போக்கு கணிசமாக அதிகரித்துள்ளதால், இவற்றால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது நமக்குத் தெரியாது என்றும்,இதனால் ஏற்படும் கொலைகள், தாக்குதல்கள் மற்றும் அதிகரித்து வரும் சமூக பதற்றங்களைக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

மேலும், பொது இடங்களில் பேசப்படும் உரைகள் மட்டுமின்றி, புத்தகங்கள், சமூக ஊடகங்கள் (வாட்ஸ்அப், வீடியோக்கள்) மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் பகிரப்படும் வெறுப்புச் செய்திகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வெறுப்புப் பேச்சில் ஈடுபடும் அமைப்புகள் அல்லது குழுக்களின் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மசோதா சட்டமாக மாறும் பட்சத்தில் குற்றத்தில் ஈடுபட்டால் முதல்முறை 01 முதல் 07 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும். தொடர்ந்து மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டால், 02 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.01 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
English Summary
A bill against hate speech based on religion and caste has been passed in the Karnataka Legislative Assembly