ஆசிரியர் மறைவுக்குப் பின் குடும்பம் தவிக்கும் நிலை...! பழைய பென்ஷன் மீண்டும் வேண்டுமென போராட்ட குரல்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த கோரிக்கையை முன்வைத்து அரசு ஊழியர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றன.

2004-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த திட்டம் ஊழியர்களின் எதிர்காலப் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்காததாக இருப்பதாகக் கூறி, அதை உடனடியாக ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “CPS திட்டம் அரசு ஊழியர்களின் சமூக பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, இந்த திட்டத்தை முற்றிலும் ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், வருகிற 6-ஆம் தேதி ஜாக்டோ–ஜியோ அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களும் உற்சாகமாக பங்கேற்க உள்ளதாகவும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் இடைவிடாது தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பாதிப்பை வெளிப்படுத்தும் சம்பவமாக, பேரையூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணினி ஆசிரியையாக பணியாற்றிய ரோசன் கதீஜா பீவி கடந்த அக்டோபர் மாதம் திடீரென உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

CPS திட்டத்தில் பணியாற்றியதால், அவரது மறைவிற்குப் பிறகு குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் கிடைக்காமல், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கல்லூரியில் கல்வி பயிலும் அவரது இரண்டு மகன்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறிய நிலை உருவானது.

இந்த துயரமான சூழ்நிலையில், பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து ஆசிரியர்களிடமிருந்து நிதி திரட்டி, ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்து 700 அவரது குடும்பத்தினருக்கு வழங்கினர். இது மனிதநேயத்தின் அடையாளமாக இருந்தாலும், அரசு வழங்க வேண்டிய அடிப்படை பாதுகாப்பை ஆசிரியர்கள் தங்களால் நிறைவேற்ற வேண்டிய அவலம் CPS திட்டத்தின் தோல்வியை வெளிப்படுத்துகிறது என சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

“இத்தகைய துயரச் சம்பவங்கள் இனி தொடராமல் இருக்க வேண்டுமெனில், அரசு உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்” என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

family distress after teachers death voice protest demanding old pension scheme reinstated


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->