தவெகவில் களைகட்டும் தேர்தல்! புஸ்ஸி ஆனந்த் டூ ஆதவ்.. டாப் 10 தவெக தலைகள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் லிஸ்ட் இதோ! - Seithipunal
Seithipunal


வரவிருக்கும் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முதல் முறையாக களம் காண உள்ளது. தேர்தல் அறிவிப்பு நெருங்கி வரும் சூழலில், கட்சியின் வேட்பாளர் தேர்வு பணிகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, தவெக சார்பில் போட்டியிட விரும்பும் முன்னணி தலைவர்கள் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சட்டசபைத் தொகுதிகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக தொடங்கியதிலிருந்து கூட்டணிக்கான அழைப்பை விடுத்து வந்தாலும், இதுவரை எந்தக் கட்சியும் அதிகாரப்பூர்வமாக இணையவில்லை. இருப்பினும், திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள், கடைசி நேரத்தில் சில கட்சிகள் தவெக பக்கம் திரும்பும் என்ற நம்பிக்கையை கட்சி நிர்வாகிகளுக்கு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கூட்டணி அமையுமா என்பது குறித்து இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்த சூழலில், தவெக சார்பில் போட்டியிட விரும்பும் தலைவர்கள் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை தேர்வு செய்யும் பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர். கட்சியின் உள்சர்வேயின்படி, சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தவெகுக்கு கணிசமான செல்வாக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, சென்னையின் குறைந்தபட்சம் 10 முதல் 12 தொகுதிகளில் 25 முதல் 30 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்தால் இந்த வாக்கு சதவீதம் மேலும் உயரலாம் எனவும் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், கட்சித் தலைவர் விஜய், வேளச்சேரி, விருகம்பாக்கம், விக்கிரவாண்டி, நாகப்பட்டினம் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய ஐந்து தொகுதிகளில் ஒன்றைத் தேர்வு செய்து போட்டியிடலாம் என பரிசீலித்து வருகிறார். தற்போது வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் ஆகிய இரண்டு சென்னை தொகுதிகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், இவற்றில் ஏதேனும் ஒன்றில் விஜய் களமிறங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், சிறுபான்மையினர் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கும் திருச்சி கிழக்கு தொகுதியையும் அவர் இரண்டாவது விருப்பமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

தவெக தேர்தல் பிரசார பிரிவின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ஆரம்பத்தில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட ஆர்வம் காட்டிய நிலையில், தற்போது திருவள்ளூர் தொகுதியை குறிவைத்து வருகிறார். கட்சியின் இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், முன்பு தனது சொந்த மாவட்டமான மதுரை உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்தாலும், தற்போது சென்னை பெரம்பூர் தொகுதியில் களமிறங்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், முன்னாள் அதிமுக தலைவர்களில் ஒருவரான ஜே.சி.டி. பிரபாகர், வில்லிவாக்கம் தொகுதியில் மீண்டும் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே அந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற அனுபவம் இருப்பதால், மீண்டும் களமிறங்க அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து விலகிய வி.எஸ். பாபு, எழும்பூர் அல்லது திரு.வி.க. நகர் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அப்பாற்பட்ட சில மாவட்டங்களிலும் தவெக தலைவர்கள் களமிறங்க தயாராகி வருகின்றனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், புதுச்சேரியை ஒட்டிய கடலூர் மாவட்டத்தில் போட்டியிட முனைப்பு காட்டி வருகிறார். மூத்த தலைவர் செங்கோட்டையன், தனது சொந்த தொகுதியான கோபிசெட்டிப்பாளையத்தில் மீண்டும் போட்டியிடத் தயாராகி வருகிறார். பிரசார பிரிவு செயலாளர் அருண்ராஜ், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியை குறிவைத்துள்ளதாகவும், கல்வியாளர் ஜேப்பியரின் உறவினரான மேரி வில்சன், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேபோல், பல் மருத்துவர் டி.கே. பிரபு சிவகங்கை தொகுதியில் களமிறங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொத்தத்தில், தவெக கட்சி தனது முதல் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளும் முன், சென்னையை மையமாகக் கொண்டு வலுவான வேட்பாளர் வரிசையை உருவாக்க முயற்சித்து வருகிறது. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் போது, இந்தத் திட்டங்கள் எவ்வளவு நடைமுறைக்கு வரும் என்பது அரசியல் வட்டாரங்களில் கவனமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Elections to be held in Tvk Pussy Anand to Aadhaav Here is the list of constituencies where the top 10 Tvk leaders want to contest


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->