எபோலா வைரஸ் அபாயம்...எல்லோரையும் உஷார்படுத்திய மத்திய அரசு...! - மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு...!
Ebola virus threat Central government warns everyone Central government orders states take action
மத்திய ஆப்பிரிக்கப் பகுதியில் அமைந்துள்ள காங்கோ நாட்டில் உயிர் பறிக்கும் எபோலா வைரஸ் தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வருவது உலக நாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே மிகவும் கொடிய மற்றும் அதிவேகமாக பரவும் வைரஸ் நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் எபோலா, காங்கோவில் தற்போது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கொடிய நோய் பரவலால் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எபோலா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், காங்கோ உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் இந்த தொற்று புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதால் பல நாடுகள் முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.இந்த பரபரப்பான சூழலில், உலக சுகாதார நிறுவனம் எபோலா பரவலை “சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலை” என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் அவசர அறிவுறுத்தல்களை அனுப்பி, நோய் தடுப்பு மற்றும் தயார்நிலை பணிகளை முழு வீச்சில் செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போதைக்கு எபோலா பாதிப்பு அபாயம் குறைவாக இருந்தாலும், சர்வதேச பயணங்கள் மற்றும் வர்த்தக தொடர்புகளை கருத்தில் கொண்டு மருத்துவ கட்டமைப்புகள் முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஆரோக்கிய அமைப்பின் அனைத்து நிலைகளிலும் விழிப்புணர்வும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ், பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து சமீபத்தில் இந்தியா வந்தவர்களிடம் காய்ச்சல், தசை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், எபோலா சிகிச்சைக்காக பிரத்யேக தனிமை வார்டுகள், தனி ஆம்புலன்ஸ் வசதிகள் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்திற்குரிய நோயாளிகளிடமிருந்து பெறப்படும் மாதிரிகளை பரிசோதனை செய்ய, புனேயில் உள்ள ஐ.சி.எம்.ஆர் தேசிய வைராலஜி நிறுவனம் முழுமையான தயார்நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் முழு விவரங்களையும் சேகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Ebola virus threat Central government warns everyone Central government orders states take action