அவர்கள் செய்த குற்றம் என்ன? சமூகநீதி வரலாற்றை படைத்த 21 ஈகியர்களுக்கு வீர வணக்கம் - டாக்டர் இராமதாஸ் மடல்! - Seithipunal
Seithipunal


சமூக நீதியை வென்றெடுக்கும் பயணத்தில் 21 ஈகியர்களும் நம்மை விண்மீன்களாக வழிநடத்துவார்கள்; வெற்றி உறுதியே என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் எழுதியுள்ள மடலில், "என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! உலகில் எந்த நாடாக இருந்தாலும், எந்த அரசாக இருந்தாலும் நீதி கேட்டு போராடுவோருக்கு முதலில் பரிசாக கிடைப்பது துப்பாக்கிக் குண்டுகள் தான். குண்டுகளை மார்பில் தாங்கியும், குண்டாந்தடிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியும் விதையாய் மண்ணில் புதைந்தவர்கள் தான் புரட்சிச் செடியை துளிர்க்கச் செய்து சமூகநீதி உள்ளிட்ட நீதிகளை மலரச் செய்கின்றனர் என்பது தான் வரலாறு. 

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மறுக்கப்பட்ட உரிமைகளை கேட்டு போராடியதற்காக காவல்துறையினரால் கொல்லப்பட்டு, இந்தியாவில் ஈடு, இணையற்ற சமூகநீதி வரலாற்றை படைத்த 21 ஈகியர்களின் 36-ஆம் ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படும் நிலையில், அவர்களுக்கு நான் எனது வீரவணக்கங்களை செலுத்துகிறேன்.

ஒட்டுமொத்த இந்தியாவில் மட்டுமல்ல... உலகின் எந்த நாட்டிலும் இப்படி ஒரு சமூகநீதி போராட்டம் நடைபெறவில்லை; உலகின் எந்த சமுதாய மக்களுக்கும் சமுகநீதிக்காக இப்படி ஒரு தியாகத்தை செய்தது கிடையாது. ‘‘எங்கள் உயிரைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. எங்கள் மருத்துவர் அய்யா கோரும் இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்குங்கள்’’ நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் வாங்கிய மாவீரன்கள் எனது கொள்கை வழித்தோன்றல்கள் என்பதை நினைக்கும் போது, அவர்களின் மறைவு எனது இதயத்தில் குருதியை வரவைத்தாலும், அவர்களின் தியாகம் என்னை தலை நிமிரச் செய்கிறது.

இரக்கமே இல்லாமல், காக்கை, குருவிகளைப் போல 21 ஈகியர்களை துப்பாக்கியால் சுட்டும், தடியால்  அடித்தும் கொலை செய்யும் அளவுக்கு அவர்கள் செய்த குற்றம் என்ன? சமூகநீதிக்காக போராடியது தான்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட சமுதாயம் வன்னியர் சமுதாயம் தான். வீரத்தை பெற்ற அளவுக்கு கல்வியைப் பெறாததால் அவர்கள் மிகவும் எளிதாக சூழ்ச்சிகளாலும், சதிகளாலும் வீழ்த்தப்பட்டு, பிறரிடம் பணி செய்து பிழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். தங்களுக்குப் பிறகு தங்கள் பரம்பரையாவது கண்ணியத்துடன் வாழ, அவர்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைக்க சமூக நீதி வழங்குங்கள் என்று மன்றாடினார்கள். ஆனால், ஆட்சியாளர்களின் மனம் இரங்கவே இல்லை.

அதன்பிறகு தான் பிரிந்து கிடந்த வன்னியர் அமைப்புகளையெல்லாம் ஒன்று திரட்டி, வன்னியர்களுக்கு  20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 1980-ஆம் ஆண்டில் தொடங்கி சமூக நீதி போராட்டத்தை முன்னெடுத்தேன். பல கட்ட போராட்டங்களை நடத்தியும் நமது உரிமைக்குரலுக்கு  அரசு செவி சாய்க்காத நிலையில் தான், 1987-ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர்  17-ஆம் நாளில் தொடங்கி ஒரு வாரத்திற்கு தொடர் சாலைமறியல் போராட்டத்தை அறிவித்திருந்தோம். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், மிகக் கொடிய தாக்குதல்களிலும் நமது பாட்டாளி சொந்தங்கள் 21 பேர் விலைமதிப்பற்ற இன்னுயிரை தியாகம் செய்தனர்.

பார்ப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம்,  சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பார்ப்பனப்பட்டு வீரப்பன்,  பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர் ஆகிய 21 பாட்டாளிகளும் செய்த தியாகம் ஈடு இணையற்றது. அவர்களுக்குப் பிறகும் பலர் நமது சமூகநீதிப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகம் என்ற உரம் தான் நமது சமூகநீதிப் போராட்டத்தை தழைக்க வைக்கிறது. அவர்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் நாம் என்றென்றும் போற்ற வேண்டும்.

அவர்கள் செய்த ஈகத்தின் பயனாகத் தான் 1989-ஆம் ஆண்டு வன்னியர்கள் உள்ளிட்ட 108 சாதிகளை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு என்ற புதிய பிரிவை உருவாக்கி அதற்கு 20% இட ஒதுக்கீட்டை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் வழங்கினார். ஆனால், போராடிப் பெற்ற அந்த இட ஒதுக்கீட்டின் பயன்கள் போராடிய சமுதாயத்திற்கே கிடைக்காததைத் தொடர்ந்து தான் மீண்டும் ஓர்  இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை நடத்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியில்  வன்னியர்களுக்கு மட்டும் 10.50% இட ஒதுக்கீட்டை வென்றெடுத்தோம். ஆனால், சமூகநீதிக் குருடர்கள் சிலர் செய்த சதியால் அந்த இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நானே மேல்முறையீடு செய்தேன். அந்த வழக்கில் தான் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை; அதற்கான சட்டத்தை அரசு நிறைவேற்றலாம் என்று உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியது.

வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நாளிலேயே,‘‘எப்பாடு பட்டாவது வன்னியர்களுக்கான  இட ஒதுக்கீட்டை மீண்டும் வென்றெடுத்துக் கொடுக்காமல் ஓயமாட்டேன்’’ என்று உறுதியளித்தேன். அதை நிறைவேற்றுவதற்காகத் தான் கடந்த  20 மாதங்களாக இடைவிடாமல் போராடிக் கொண்டிருக்கிறேன். எனது சிந்தையும், செயலும் வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டையே மையமாகக் கொண்டிருப்பதால் எனது பல இரவுகள் உறக்கமின்றியே கழிகின்றன.

85 வயதானாலும், அதை பொருட்படுத்தாமல் வன்னியர்களுக்கான சமூகநீதியை வென்றெடுப்பதற்காக  உழைத்து வருவதன் பயனாக நமது இலக்கை நோக்கிய பயணத்தில் பல மைல்கற்களை எட்டியுள்ளோம். நமது தரப்பு நியாயத்தை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வன்னியர்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதை தமிழக சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் வாக்குறுதியாக அளித்திருக்கிறார். உச்சநீதிமன்றம் வழிகாட்டியவாறு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும்  வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்த தரவுகளை திரட்டவும், அதனடிப்படையில் உள் இட ஒதுக்கீடு குறித்து அரசுக்கு பரிந்துரைக்கவும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணை வழங்கப் பட்டுள்ளது. அதற்காக ஆணையத்திற்கு முதலில் 3 மாதங்கள், பின்னர் 6 மாதம் என ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்டுள்ள 9 மாத காலக்கெடு, இன்னும் ஒரு மாதத்திற்குள், அதாவது அடுத்த மாதம் 11-ஆம்   நாள் நிறைவடைகிறது. அதற்குள் நமக்கு நல்ல செய்தி கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

கட்சி நிகழ்ச்சிகளுக்காகவும், தனிப்பட்ட நிகழ்வுகளுக்காகவும் நான் எங்கு சென்றாலும் என்னை நோக்கி நமது சொந்தங்கள் எழுப்பும் வினா 10.50% இட ஒதுக்கீடு எப்போது கிடைக்கும் என்பது தான். பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெறுவதற்காக என்னுடன் தொலைபேசியில் பேசும் சிறுவர்கள் கூட இதே  வினாவைத் தான் எழுப்புகின்றனர். இட ஒதுக்கீடு நமது உரிமை; உச்சநீதிமன்றமே அனுமதியளித்தும் கூட வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க இவ்வளவு தாமதமா? என்றெல்லாம் என்னிடம் கேட்கிறார்கள்.

2022, 2023 ஆகிய ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. நமது உரிமையான சமூகநீதியை வென்றெடுப்பதில் செய்யப்படும் காலதாமதம் கோபத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை தான்.


 
வன்னியர் இட ஒதுக்கீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் நான் மீண்டும், மீண்டும் அளிக்கும் வாக்குறுதி ஒன்று தான். ‘‘ பாட்டாளி மக்களான வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை வென்றெடுத்து கொடுக்காமல் ஓயமாட்டேன்’’ என்பது தான்.
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை போராட்டம் நடத்தாமல் வென்றெடுக்க வேண்டும் என்பதற்காகவே காத்துக் கொண்டிருக்கிறோம். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எவ்வாறு வென்றெடுக்க வேண்டும் என்பதை நான் அறிவேன். இந்த உண்மை அனைவருக்கும் தெரியும். வன்னியர்களுக்கான சமூகநீதியை  வென்றெடுப்பதற்கான இலக்கை நோக்கிய பயணத்தில் நமக்கு வழிகாட்டும் விண்மீன்களாக ஈகியர்கள்  இருப்பர். அதனால், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த கவலை பாட்டாளி சொந்தங்களுக்கு தேவையில்லை.

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை நாம் வென்றெடுத்தே தீருவோம். இது உறுதி. இந்த உணர்வுடன் நமது சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ஆம் நாளில் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்த வேண்டும்; அனைவரும் அவர்களின் வீட்டு முன்பு இட ஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்ற பதாகையை அமைத்து மரியாதை செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss Vanniyar Reservation Protest MBC Reservation 2023


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->