அரசியலமைப்புச் சட்டம் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கும் பொருந்தும்! கிரீமிலேயர் முறையை ஒழிக்க வேண்டும் - டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்கும் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது.

பட்டியலின, பழங்குடியின மக்களின் சமூகநீதியை காப்பதற்கான மத்திய அரசின் இந்த அணுகுமுறை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சமூக நீதியை  பாதுகாப்பதற்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது போன்று பட்டியல் வகுப்பில் உள்ள சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த ஒன்றாம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன், பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை கொண்டு வர வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தி இருந்தனர். 

ஆனால், பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை திணிக்கக் கூடாது என்று  நான் வலியுறுத்தியிருந்தேன். அதன்படியே கடந்த 10&ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை அறிமுகம் செய்யப்படாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக மத்திய அரசு தெரிவித்திருக்கும் காரணம் பாராட்டத்தக்கது.

அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலினத்தவர்/பழங்குடியினர் வகுப்புக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் என்ற தத்துவமே குறிப்பிடப்படவில்லை என்பதால், அதை செயல்படுத்த முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கும் பொருந்தும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகிய மூன்று பிரிவினரையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற பெயரில் தான் அம்பேத்கர் குறிப்பிட்டிருந்தார். அவர்களில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் என்பவர்கள் யார்? என்பதற்கான வரையறைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 341, 342 ஆகிய பிரிவுகளில் இடம்பெற்றிருந்தன.

ஆனால், இப்போது ஓபிசி என்றழைக்கப்படும் வகுப்பினருக்கான வரையறை அரசியலமைப்புச் சட்டத்தில்  இல்லை. காரணம், அப்போது  ஓபிசி என்ற வகுப்பினர் அடையாளம் காணப்படவில்லை. 340&ஆம் பிரிவின் அடிப்படையில் மண்டல் ஆணையம் தான் அந்த வரையறையை உருவாக்கியது. பட்டியலினத்தவர், பழங்குடியினர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதால் தான் அவர்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படுகின்றனர்.

அதனால் அரசியலமைப்புச் சட்டத்தில் கிரீமிலேயர் இல்லை என்பது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பொருந்தும். இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி தான் ஓபிசி இட ஒதுக்கீட்டில்  கிரீமீலேயர் திணிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாமல் இடையில் திணிக்கப்பட்ட இந்த முறையை மத்திய அரசு நினைத்தால் அகற்ற முடியும்.

இன்னொருபுறம், இந்தியாவின் இடஒதுக்கீட்டு நடைமுறையில் கிரீமிலேயர் முறை என்பது பிற்படுத்தப்பட்டவர்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சமூகநீதி வழங்குவதாக இல்லை. மாறாக, ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் சமூகநீதியை மறுப்பதற்கான கருவியாகவே கிரீமிலேயர் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் அறிமுகம் செய்யப்பட்டு 34 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன.

ஆனால், இன்று வரை கிரீமிலேயர்களை அடையாளம் காண்பதற்கான நேர்மையான வழிமுறை கண்டுபிடிக்கப்படவில்லை. ஒருபுறம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ஒரு தரப்பினரை தகுதி இல்லை என்று நிராகரிக்கவும், தகுதி இருப்பதை மறுக்க முடியாவிட்டால் அவர்களை கிரீமிலேயர் முத்திரை குத்தி வெளியேற்றவும் தான் கிரீமிலேயர் முறை பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டு 34 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. ஆனாலும், மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரதிநிதித்துவம் இன்னும் 20% தாண்டவில்லை.

கிரீமிலேயர் முறை உண்மையாகவே பயனளித்து இருந்தால், ஓபிசிகளுக்கான 27% இட ஒதுக்கீட்டில், மொத்தமுள்ள 2633 சாதிகளில் 983 சாதிகளுக்கு, எந்த பயனும் கிடைக்காத நிலையும்,  மேலும் 994 சாதிகளுக்கு, 2.66% இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் நிலையும் ஏற்பட்டிருக்காது. அதனால், தான் பிற்படுத்தப்பட்டவர்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சமூகநீதி வழங்குவதற்கு சிறந்தத் தீர்வு உள் இட ஒதுக்கீடு தானே தவிர, கிரீமிலேயர் முறை கிடையாது.

எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்வதன் மூலம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை அகற்ற வேண்டும். அதற்கு மாறாக, மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கையை ஆய்வு செய்து, ஓபிசி வகுப்பினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say about OBC Reservation Central Govt


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->