வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு! தமிழகமெங்கும் சிறப்பு முகாம்கள் – தேர்தல் அதிகாரி அறிவிப்பு
Opportunity add your name voter list Special camps across Tamil Nadu Election official announcement
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,"இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் நடைமுறை அடுத்த மாதம் (ஜனவரி) 18-ஆம் தேதி வரை தொடரும்.

இந்த காலகட்டத்தில் தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் எளிதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
அதன்படி, டிசம்பர் 27 (சனிக்கிழமை), 28 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஜனவரி 3 (சனிக்கிழமை), 4 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும்.வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியான புதிய வாக்காளர்கள், படிவம்-6 மற்றும் உறுதிமொழி படிவத்தை சமர்ப்பித்து தங்களின் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
அதேபோல், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள், தவறான சேர்க்கைகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ அல்லது பெயர் நீக்கம் செய்யவோ படிவம்-7 மூலம் விண்ணப்பிக்க முடியும்.
மேலும், முகவரி மாற்றம், வாக்காளர் விவரங்களில் திருத்தம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் போன்ற தேவைகளுக்காக படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம்" என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Opportunity add your name voter list Special camps across Tamil Nadu Election official announcement