மாதத்தில் மூன்றாவது முறை... ஏன் இந்த கொடுமை?... மத்திய அரசுக்கு மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


சமையல் எரிவாயு விலை ஒரே மாதத்தில் மூன்றாவது முறை விலை உயர்த்துவதா? என கேள்வி எழுப்பியுள்ள மருத்துவர் இராமதாஸ், மானிய தொகை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சமையல் எரிவாயு விலை உருளையின் விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயுவின் விலை மூன்றாவது முறையாக உயர்ந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு நியாயமல்ல.

சமையல் எரிவாயு விலை கடந்த 21 நாட்களில் மட்டும் ரூ.100 உயர்ந்திருக்கிறது. கடந்த 4-ஆம் தேதி சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.25 உயர்த்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து விலகும் முன்பே கடந்த 15-ஆம் தேதி சமையல் எரிவாயு உருளை விலை மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் சமையல் எரிவாயு விலை மூன்றாவதாக ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் சென்னையில் சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.810 ஆக உயர்ந்திருக்கிறது.

சென்னையில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சமையல் எரிவாயு விலை ரூ.406 ஆக இருந்தது. இப்போது அதை விட இரு மடங்காக விலை உயர்ந்துள்ளது. அதாவது சமையல் எரிவாயு விலை 5 ஆண்டுகளில் இரு மடங்காகியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் ரூ.37, ஜூலை மாதத்தில் ரூ. 4, திசம்பர் மாதத்தில் ரூ.100, பிப்ரவரி மாதத்தில் ரூ.100 என விலை உயர்ந்திருக்கிறது. ஒருபுறம் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மானியமும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான பாதிப்புகள் இரு மடங்காகியுள்ளன. வழக்கமாக மானிய விலை சமையல் எரிவாயு உயரும் போது அது மக்கள் மீது சுமத்தப்படாது. விலை உயர்வுக்கு இணையாக மத்திய அரசின் மானியம் உயர்த்தப்படும் என்பதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், கடந்த சில மாதங்களாக மானிய விலை சிலிண்டருக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் உயர்த்தப்படவில்லை. அதுமட்டுமின்றி எரிவாயு விலை மீதான மானியமும் குறைக்கப்பட்டு வருகிறது.

2019-ஆம் ஆண்டு மே மாதம் சமையல் எரிவாயு விலை மீதான மானியம் உருளைக்கு 243.98 ரூபாயாக இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் மானியத்தை ரூ.24.95 ஆக மத்திய அரசு குறைத்து விட்டது. இன்றைய நிலவரப்படி மானியத்துடன் கூடிய எரிவாயு உருளையின் விலையும், மானியமில்லாத  எரிவாயு உருளை விலையும்  ரூ. 810 என்ற ஒரே விலையில் விற்கப்படுவதால் எரிவாயு உருளைக்கான மானியம் நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது. அதன்படி பார்த்தால் நேற்று வரை மானியத்துடன் கூடிய எரிவாயு உருளைக்கு நிகர விலையாக ரூ.760 மட்டுமே செலுத்தி வந்த வாடிக்கையாளர்கள் இனி  உருளைக்கு ரூ.810 செலுத்த வேண்டும். அவர்களுக்கு இனிமேல் எந்த மானியமும் கிடைக்காது.

அதனால், இன்று மட்டும் எரிவாயு விலை ரூ.50 அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் ரூ.125 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வை மக்களால் தாங்க முடியாது. எனவே சமையல் எரிவாயுவுக்கான அடிப்படை விலையாக ரூ.500 நிர்ணயித்து மீதமுள்ள தொகை முழுவதையும் மானியமாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Request to Central Govt about Gas Cylinder Price 25 Feb 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->