தில்லியில் சாத்தியமாவது, தமிழகத்தில் வெத்துவேட்டா?.. நெத்தியடி அடித்த மருத்துவர் இராமதாசு.!! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்க கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றான தில்லியில் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக சோதனைகளின் எண்ணிக்கையை அடுத்த இரு நாட்களில் இரு மடங்காகவும், அடுத்த 6 நாட்களில் மும்மடங்காகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த முடிவு வரவேற்கத்தக்கதும், விரைவில் பயனளிக்கக்கூடியதும் ஆகும்.

கொரோனா வைரஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தில்லி தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று வரை 42,687 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தில்லியில் 38,958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில்  தில்லி 38,958 பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்திலும், சென்னை 30,444 பாதிப்புகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. சென்னையைப் போலவே தில்லியிலும் நிலைமை மிகவும் மோசமாக உள்ள நிலையில், மத்திய அரசு தலையிட்டு, யூனியன் பிரதேச நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் 20,000 படுக்கைகளை கூடுதலாக உருவாக்கவும் தீர்மானித்துள்ளது.

தில்லியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள இந்த செயல்திட்டம் சென்னைக்கும் பொருந்தும். சோதனைகளை அதிகரித்து கொரோனா பரவலை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சென்னை மாநகருக்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அடையாளம் காணப்படாதவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் நிலையில், அவர்கள் அனைவரையும் குறிப்பிட்ட நாட்களுக்குள் கண்டுபிடித்து  சிகிச்சை வளையத்துக்குள் கொண்டு வந்தால் மட்டும் தான் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும். அதற்காக சென்னையில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 20,000 பேருக்கு சோதனை நடத்தப்பட வேண்டியது கட்டாயமாகும். ஆனால், சென்னையில் ஒரு நாளைக்கு 6000 பேருக்கு மட்டும் தான் சோதனை செய்யப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னையில் தினமும் 20,000 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்படுவது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. தமிழக அரசு நினைத்தால் இதை சாதிக்க முடியும். தில்லியில் அரசுத்துறையில் 17 சோதனை மையங்கள், தனியார் துறையில் 23 மையங்கள் என மொத்தம் 40 மையங்கள் உள்ளன. அவற்றில் தினமும் 8600 பேருக்கு சோதனைகள் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக  அரசுத்துறையில் 45, தனியார் துறையில் 34 என மொத்தம் 79 மையங்கள் உள்ளன. சென்னையில் மட்டும் 30&க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் உள்ளன. தில்லியில் 6 நாட்களில் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த முடியும் போது, சென்னையிலும் நிச்சயமாக உயர்த்த முடியும்.

இந்தியாவிலேயே அதிக அளவில் சோதனைகளை செய்து வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இம்மாதம் ஒன்றாம் தேதி தமிழகத்தில் 11,377 சோதனைகள் மட்டுமே செய்யப்பட்ட நிலையில், நேற்று 18,782 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமலேயே சோதனைகளின் எண்ணிக்கையை 60% அதிகரிக்க முடிந்த போது, அரசின் அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி முயற்சி செய்தால் சோதனைகளின் எண்ணிக்கையை மும்மடங்காக  உயர்த்துவது சாத்தியம் தான். சென்னையில் உள்ள அரசு பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் உள்ள பிசிஆர் கருவிகளை பெற்று சிறப்பு சோதனை மையங்களை அமைக்க முடியும்; தமிழக அரசிடம் பிசிஆர் டெஸ்ட் கிட்களும் போதிய அளவில் இருப்பதால் தமிழக அரசு நினைத்தால் அடுத்த சில நாட்களில் சென்னையில் மட்டும் சோதனைகளின் எண்ணிக்கையை 20,000 ஆக உயர்த்த முடியும். என்ன செலவானாலும் கவலைப்படாமல் அதற்கான நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும்.

அதிக எண்ணிக்கையில் சோதனைகள் செய்யப்பட்டால், அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள்.... அத்தகைய சூழலில் அவர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்கு தேவையான கட்டமைப்புகள் சென்னையில் இருக்குமா? என்ற வினா எழுப்பப்படலாம். சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 10000 புதிய படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. தில்லியில் அவசரத் தேவைகளுக்கான தொடர்வண்டிப் பெட்டிகள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அதேபோன்ற உத்திகளை பயன்படுத்தி  சென்னையில் படுக்கைகளின் எண்ணிக்கையை இன்னும் 10000 அதிகரிக்கலாம். எந்த உத்திகளை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்; ஆனால், இலக்கை அடைய வேண்டும் என்பது தான் இன்றைய நிலையில் முக்கியமாகும்.

எனவே, சென்னையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதை சவாலாக கருதி, துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும். என்ன செய்தாவது சென்னையில் கொரோனா வைரஸ் சோதனைகளின் எண்ணிக்கையை அடுத்த சில நாட்களில் 20,000 ஆக உயர்த்த வேண்டும்: அதன் மூலம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். சோதனைகளை அதிகரிப்பதற்குத் தேவையான கூடுதல் பிசிஆர் டெஸ்ட் கிட்களை தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்குவதுடன், கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான நிதியுதவியையும் வழங்க வேண்டும். அத்துடன் சென்னையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு விதிகளை, தெளிவான முன் அறிவிப்புடன், கடுமையாக்குவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் " என்று கூறியுள்ளார்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss report about Delhi corona testing


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal