சாதிவாரி கணக்கெடுத்ததால் சாதிக்கும் பிகார்- நடத்தாததால் சறுக்கும் தமிழ்நாடு - எச்சரிக்கும் டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


சமூகநீதியைக் காக்கும் நோக்குடன் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்திய பிகார் மாநில அரசு, அதனடிப்படையில் அடுத்தடுத்து சமூகநீதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 94 லட்சம் குடும்பங்களை உயர்த்தும் நோக்குடன் அவர்கள் தொழில்  தொடங்க தலா ரூ.2 லட்சம், வீடற்ற 67 லட்சம் குடும்பங்களுக்கு சொந்த வீடு வழங்குவதாக பிகார் அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசோ சமூகநீதியைக் காப்பதில் சறுக்கிக் கொண்டிருப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "பிகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் அம்மாநிலத்தில் நடைமுறையில் இருந்த சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் அளவை 50 விழுக்காட்டிலிருந்து 65% ஆக உயர்த்திய நிதிஷ்குமார் தலைமையிலான அரசு, அடுத்தக்கட்டமாக வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களை முன்னேற்றுவதற்கான திட்டத்தை அறிவித்திருக்கிறது.

 

பிகார் மாநில மக்களில் 36.10%, அதாவது 94 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ், அதாவது மாத வருமானம் ரூ.6,000-க்கும் குறைவாக ஈட்டுவதாக சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது. அவர்கள் சுயதொழில் தொடங்கியோ, வேறு வகையிலோ முன்னேறும் வகையில், அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.2 லட்சம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த பிகார் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

94 லட்சம் குடும்பங்களுக்கும் மொத்தம் 3 தவணைகளாக இந்தத் தொகை வழங்கப்படும். முதல் கட்டமாக 5 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளது. 2024-25ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் மேலும் 20 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்.

அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், நிதிநிலைமைப் பொறுத்து இந்த எண்ணிக்கை உயர்த்தப்படக்கூடும். மொத்தம் 5 ஆண்டுகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தி முடிக்கப்படும். இது தவிர சொந்த வீடற்ற  67 லட்சம் குடும்பங்களுக்கு சொந்த வீடு கட்டித் தரும் திட்டத்தையும் பிகார் செயல்படுத்தவுள்ளது.

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 94 லட்சம் குடும்பங்கள் தொழில் தொடங்குவதற்காக தலா ரூ.2 லட்சம் வழங்கும் திட்டத்திற்காக மொத்தம் ரூ.1.88 லட்சம் கோடி, 67 லட்சம் குடும்பங்களுக்கு வீடு கட்டித் தர ரூ.1.005 லட்சம் கோடி என மொத்தம் ரூ. 2.885 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளது. இது பிகார் மாநிலத்தின் ஓராண்டு நிதிநிலை அறிக்கை மதிப்பை விட அதிகமாகும். பிகார் மாநிலத்தின் மொத்தக் கடன் தொகையாக ரூ.2.90 லட்சம் கோடிக்கு இணையானது ஆகும்.

சமூகநீதியை பாதுகாப்பதற்காக  இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இந்த அளவுக்கு தொகையை செலவு செய்ததில்லை. இதன்மூலம் சமூகநீதி பாதுகாப்புக்கான வரைபடத்தில் பிகாரின் மதிப்பு செங்குத்தாக உயர்ந்து கொண்டிருக்கிறது.  பொருளாதார நிலையில், இந்தியாவின் 15-ஆம் மாநிலமாக திகழும் பிகார், சமூகநீதிக்காக இவ்வளவு பெருந்தொகையை செலவிடுவது வியப்பளிக்கிறது. இதற்காக பிகாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இன்னொருபுறம் சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாடு, சமூகநீதியைக் காப்பதற்காக  என்ன செய்திருக்கிறது? என்று பட்டியலிட்டு பார்த்தால், சொல்வதற்கு எதுவும் இல்லாமல், மிகப்பெரிய ஏமாற்றம் மட்டுமே விஞ்சுகிறது. பிகாரில் நடத்தப்பட்டது போன்ற சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

தமிழக அரசு நினைத்திருந்தால் கர்நாடகத்துக்கு முன்பாகவே இந்தக் கணக்கெடுப்பை நடத்தி முடித்து இருக்கலாம். ஆனால், அரசியலுக்காக மட்டும் சமூகநீதி பேசும் தமிழக அரசு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்க எந்த வகையிலும் தயாராக இல்லை என்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால், அதில் கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவை 69%&லிருந்து 90% ஆக உயர்த்தியிருக்க முடியும்; தமிழ்நாட்டில் மாத வருமானம் ரூ.6000க்கும் குறைவாக ஈட்டும் குடும்பங்களின் எண்ணிக்கை  28.50 லட்சம் இருக்கும் என உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட்டு அவர்கள் சுயதொழில் தொடங்கி முன்னேற்றுவதற்காக சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தியிருக்க முடியும்; தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தான் மிக அதிக அளவில் குடிசைகளில் வாழ்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் நிலையில், அனைத்து சமூகங்களையும் சேர்ந்த ஏழைக் குடும்பங்களுக்கு சொந்த வீடு கட்டித் தந்திருக்கலாம். ஆனால், தமிழக அரசு செய்யவில்லை.

மாநில உரிமை மீட்பு மாநாடு நடத்தும் திமுக, மாநில உரிமைகளை காப்பதில் உறுதியாக இருந்தால் 2008&ஆம் ஆண்டின் இந்திய புள்ளிவிவர சேகரிப்பு சட்டத்தின்படி  (The Collection of Statistics Act, 2008) தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்தியிருக்க வேண்டும். ஆனால், மாநில அரசால் நடத்தப்பட வேண்டிய ஒரு கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்  என்று வலியுறுத்துவதன் மூலம் மாநில உரிமைகளை திமுக அரசு மத்திய அரசிடம் தாரை வார்த்திருக்கிறது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாதன் மூலம் அதன் மூலம் வென்றிருக்க வேண்டிய வாய்ப்புகளை இழந்து விட்ட தமிழ்நாடு, இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் 69% இட ஒதுக்கீட்டையும் பறிகொடுக்கும் ஆபத்து உள்ளது. இத்தகைய சமூகநீதி சறுக்கல்களில் இருந்து தமிழ்நாட்டை பாதுகாக்கும் வகையில், இனியாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த  தமிழக அரசு முன்வர வேண்டும். வரும் 23&ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக சாதகமான முடிவை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Condemn to TNGovt For Community vise census


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->