தமிழக பல்கலை.களை மிரட்டும் பல்கலைக்கழக மானியக்குழு... மருத்துவர் இராமதாஸ் கொந்தளிப்பு.! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசு பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் புதிய கல்விக் கொள்கையை  உடனடியாக செயல்படுத்தாவிட்டால் அவற்றுக்கு வழங்கப்படும் மானியம் நிறுத்தப்படும் என்று பல்கலைக் கழக மானியக்குழு எச்சரித்திருக்கிறது. புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்காத நிலையில், அதை செயல்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், இல்லாவிட்டால்  மானியத்தை நிறுத்தப்போவதாக அச்சுறுத்துவதும் மாநில சுயாட்சிக்கு சவால் விடுக்கும் செயல்களாகும்.

புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும்படி தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு நெருக்கடி அளித்து வருவது குறித்து கடந்த 3-ஆம் தேதி விரிவாக அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனாலும், பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் மானியக் குழுவின் நெருக்கடி தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. புதியக் கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக கடந்த சில வாரங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அனுப்பியிருக்கிறது.

அண்மையில் அனுப்பிய கடிதத்தில் புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை உடனடியாக செயல்படுத்தும்படி மானியக்குழு ஆணையிட்டுள்ளது. குறிப்பாக அனைத்து கல்வி நிறுவனங்களும், அவற்றின் பேராசிரியர்களும் தங்களின் விவரங்களை பல்கலைக்கழக மானியக்குழுவால் நடத்தப்படும் வித்வான் இணைய தளத்திலும், இந்திய ஆராய்ச்சி வலைத்தள இணைப்பு அமைப்பிலும் பதிவு செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யாத உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம் நிறுத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு எச்சரித்துள்ளது. இந்த அப்பட்டமான மிரட்டல் கண்டிக்கத்தக்கது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு இருப்பது உண்மை தான். இப்போது கூடுதலாக உயர்கல்வி நிறுவனங்களில் புதியக் கல்விக் கொள்கை செயல்படுத்தப்படுவதை கண்காணிக்கும் அதிகாரமும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு வழங்கப்பட்டிருப்பதை மறுக்க முடியாது. ஆனால், இந்த அதிகாரங்களை வைத்துக் கொண்டு தமிழகத்திலுள்ள அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை மிரட்டும் செயலில் ஈடுபடக்கூடாது.

புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்தும் விஷயத்தில் தமிழக அரசு பல்கலைக்கழகங்களும், அரசு கல்லூரிகளும் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. இந்த விஷயத்தில் தமிழக அரசு எத்தகைய கொள்கை முடிவை எடுக்கிறதோ, அதைத் தான் தமிழக அரசு பல்கலை.களும், கல்லூரிகளும் செயல்படுத்த முடியும். புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் விஷயத்தில் தமிழக அரசு இன்னும் எந்த கொள்கை முடிவையும் எடுக்கவில்லை. அதற்காக ஒரு குழுவை அமைத்து அதன் முடிவுக்காக அரசு காத்திருக்கிறது. அந்த அறிக்கையை பெற்று ஒரு கொள்கை முடிவை எடுக்கும்வரை தமிழக அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளால் எதுவும் செய்ய முடியாது. இத்தகைய சூழலில் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்று மானியக் குழு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிப்பதைத் தவிர அரசு பல்கலைக்கழகங்களுக்கு வேறு வழியில்லை.

பல்கலைக்கழக மானியக்குழு அதன் அதிகார வரம்பையும், பல்கலைக்கழகங்களின் சூழலையும் உணர்ந்து செயல்பட வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு வகுத்த விதிகளுக்கு எதிராக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டால், அதற்காக அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவும், மானியத்தை நிறுத்தவும் மானியக் குழுவுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், புதியக் கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்துவது மாநில அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது; மாநில அரசு கொள்கை முடிவு எடுப்பதற்கு முன்பாக, அது குறித்து பல்கலை.களை மானியக்குழு கட்டாயப்படுத்தக் கூடாது; கட்டாயப்படுத்த முடியாது.

அதுமட்டுமின்றி, புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது தொடர்பாக பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பும் சுற்றறிக்கைகள் குறித்து தமிழக அரசுக்கோ, உயர்கல்வித் துறைக்கோ மானியக்குழு தெரிவிப்பதில்லை. உயர்கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ள ஒரு துறையாகும். தமிழக அரசால் தொடங்கப்பட்டு, அதன் ஆளுகையில் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளில் மாநில அரசுக்கு தெரியாமல் ஆதிக்கம் செலுத்த பல்கலைக்கழக மானியக்குழு முனைவது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் செயலாகும்; கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான இச்செயலை தமிழக அரசு தடுக்க வேண்டும்.

புதியக் கல்விக் கொள்கை குறித்து சுதந்திரமாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தை மத்திய அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் மதிக்க வேண்டும். புதியக் கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் வரை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு எந்த வகையிலும் பல்கலைக்கழக மானியக்குழு நெருக்கடி கொடுக்கக் கூடாது; அச்சுறுத்தக் கூடாது. இதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss Angry about Central govt Forced University about Educational Bill 2020


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->