கர்நாடகத்திடம் கற்றுக் கொள்ளுங்கள்! தமிழக அரசுக்கு டாக்டர் இராமதாஸ் அறிவுரை! - Seithipunal
Seithipunal


கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் உள்ள கடைகள் & வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் பிப்ரவரி மாதத்திற்குள் கன்னட மொழியில் மாற்றப்படவில்லை என்றால், அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று அம்மாநகராட்சி அறிவித்திருக்கிறது. கர்நாடக வணிகத்தில் கன்னடமே ஆட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "கர்நாடகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் 60% பரப்பளவு கன்னடத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அம்மாநிலத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அச்சட்டத்தை முழு அளவில் செயல்படுத்த முடிவு செய்துள்ள பெங்களூர் மாநகராட்சி,‘‘ பெங்களூரு மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 1400 கி.மீ தொலைவுக்கு சாலைகளும், உட்புற சாலைகளும் உள்ளன. அவற்றில் உள்ள அனைத்து கடைகளின் பெயர்ப்பலகைகளும் ஆய்வு செய்யப்படும். எந்தெந்த கடைகளின் பெயர்ப்பலகைகளில் 60% கன்னடம் இல்லையோ, அந்த கடைகளுக்கு அறிவிக்கை வழங்கப்படும்.

அந்தக் கடைகள் தங்களின் பெயர்ப்பலகைகள் 60% அளவுக்கு கன்னடத்தில் எழுதப்பட்டிருப்பதை  பிப்ரவரி 28&ஆம் நாளுக்குள் உறுதி செய்து சம்பந்தபட்ட மண்டல ஆணையர்களிடம் கடிதம் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறிய கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்’’ என அறிவித்துள்ளது.

ஒரு மாநிலத்தில், குறிப்பாக மாநிலத்தின் தலைநகரத்தில் உள்ள கடைகளின் பெயர்ப்பலகைகள் அனைத்தும் அந்த மாநிலத்தின் மொழியில் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அந்த வகையில் பெங்களூரு மாநகராட்சியின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது. பெங்களூருவுடன் தமிழகத்தையும், சென்னை மாநகரத்தையும் ஒப்பிடும் போது நிலைமை கண்ணீரை வரவழைக்கும் வகையில் தான் உள்ளது.

தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தொடர்பாக 1948ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி 575 எண் கொண்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ‘‘எல்லா நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும். பிறமொழிகள் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆங்கில வரிகள் இரண்டாம் இடத்திலும் ஏனைய மொழிகள் அதற்கு அடுத்தும் வர வேண்டும்.

பெயர்ப் பலகைகளில் பிற மொழிகளைப் பயன்படுத்தும் போது தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகளுக்கான இடங்கள் 5 : 3 : 2 என்ற அளவில் இருக்க வேண்டும். பெயர்ப் பலகையிலுள்ள எழுத்துக்கள் சீர்திருத்த வரி வடிவில் இருக்க வேண்டும்’’ என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதன்பிறகு 46 ஆண்டுகள் ஆகியும் அந்த அரசாணையில் 5% கூட செயல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.

சென்னையில் ஆங்கிலத்தில் பெயர்ப்பலகைகள் மின்னுகின்றன. ஆனால், தனித்தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகளை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. சென்னையில் மட்டும் தான் என்றில்லை... தமிழ்நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் கடைகளின்  பெயர்ப்பலகைகளில் அழகுத் தமிழுக்கு மாற்றாக அரைகுறை ஆங்கிலத்தில் தான் காட்சியளிக்கின்றன.

அக்காட்சியை காண மனம் பொறுக்கவில்லை. இந்த அவல நிலையை மாற்ற வேண்டும் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறேன். 1990&களின் நிறைவில் முதலமைச்சராக இருந்த கலைஞரில் தொடங்கி இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை அனைவரும் பெயர்ப்பலகைகளில் தமிழ் இருப்பதை  உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வருகின்றனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும்; பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழியாக்கப்பட வேண்டும்; எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உலகத் தாய்மொழி நாளான கடந்த பிப்ரவரி 21ஆம் நாளில் சென்னையில்  தொடங்கி பிப்ரவரி 28ஆம் நாள் மதுரை வரை ‘‘தமிழைத் தேடி’’ என்ற தலைப்பில் பரப்புரை பயணம் மேற்கொண்டேன்.

அந்த பயணத்தின் போது கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழில் எழுத வேண்டும் என்று வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையும், தொழிலாளர் நலத்துறையும் அறிவிக்கைகள் வெளியிட்டன. ஆனால், தொடர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழை கட்டாயமாக்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், தமிழில் பெயர்ப்பலகைகளை அமைக்காத கடைகளுக்கு விதிக்கப்படும் அபராதம் பலமடங்கு உயர்த்தப்படுவதுடன், குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும்  என்று ஆணையிட்டது.

அதைத் தொடர்ந்து தமிழில் பெயர்ப்பலகை எழுதாத கடைகளுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அதன் பின்னர் 9 மாதங்களாகியும் இதுவரை அதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்கவில்லை.

தமிழ்ப் பெயர்ப்பலகைகள் தொடர்பாக அரசுக்கு மட்டுமின்றி வணிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தேன். சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வணிகர்களை நேரில் சந்தித்து துண்டறிக்கை வழங்கினேன். அதைத் தொடர்ந்து ஒரு சில வணிகர்கள் தமிழில் பெயர்ப்பலகைகளை அமைத்தாலும்  பெரும்பான்மையான வணிகர்கள் அதற்கு தயாராக இல்லை. கடுமையான சட்ட நடவடிக்கைகளை  மேற்கொள்வதன் மூலமாகத் தான் பெயர்ப்பலகைகளில் அன்னை தமிழ் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

எனவே, பெங்களூரு மாநகராட்சியைப் போன்று தமிழக அரசும் இதில் கடுமையான நிலைப்பாட்டை  எடுக்க வேண்டும். பெயர்ப்பலகைகளில் 50% தமிழ் இல்லாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்வது  உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் பெயர்ப்பலகைகளில் தமிழ் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்.உலகத்தாய்மொழி நாளான பிப்ரவரி 21ஆம் நாளுக்கும் இதை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Advice to TNGovt for Tamil Name board in shops 26122023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->