சென்னை போலீசை பதறவைத்த இ-மெயில்! கனிமொழி எம்.பி. வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
DMK MP Kanimozhi bomb threat chennai
சென்னையில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அடிக்கடி இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பது போலீசாருக்கு பெரும் சவாலாகியுள்ளது.
பல்வேறு போலி இ-மெயில் முகவரிகளைப் பயன்படுத்தி மர்ம நபர் முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள் மற்றும் கட்சி அலுவலகங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி எம்.பி. வீடு, மயிலாப்பூரில் ஆடிட்டர் குருமூர்த்தி வீடு, முன்னாள் டி.ஜி.பி. நடராஜ் வீடு, ஆழ்வார்பேட்டையில் நாரதகான சபா, வேப்பேரி பெரியார் திடல், கிழக்கு கடற்கரை சாலை, இஸ்கான் கோவில் ஆகிய இடங்களுக்கும், மேலும் தேனாம்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் உடனடியாக அந்த ஏழு இடங்களிலும், மெட்ரோ நிலையத்திலும் தீவிர சோதனைகள் மேற்கொண்டனர். ஆனால் எந்தவித வெடிகுண்டும் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மெட்ரோ நிலையத்துக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபர் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஞானமூர்த்தி எனக் கண்டுபிடிக்கப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது தொலைபேசி எண் வழியாக இருப்பிடம் கண்டறியப்பட்டதாகவும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இ-மெயில் மூலமாக தொடர்ந்து மிரட்டல் விடுக்கும் மர்ம நபர் இன்னும் போலீஸ் கையில் சிக்காததால், அவரைக் கண்டுபிடிக்க தீவிரமாக தேடுதல் நடைபெற்று வருகிறது.
English Summary
DMK MP Kanimozhi bomb threat chennai