குடியரசு தின விழாவுக்காக ஆளுநருக்கு சமாதான கொடி.. திமுக தரப்பு தீவிரம்..!!
DMK appeasing the TN Governor for the Republic Day celebrations
தமிழக ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றுக்கொண்ட ஆர்.என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே அரசியல் ரீதியில் பல முரண்பாடுகள் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக அவர் பாஜகவின் கருத்துக்களை பொதுவெளியில் பேசி வருவது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தமிழக அரசால் வழங்கப்பட்ட உரையை வாசிக்காமல் சில பகுதிகளை சேர்த்தும் நீக்கியும் படித்திருந்தார்.

அப்பொழுது தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அவர் தீர்மானம் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுதே தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 14-ஆம் தேதி திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக கவர்னரை ஒருமையில் விமர்சித்து இருந்தார். அதேபோன்று திமுகவின் தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழக ஆளுநர் ரவியை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் தற்பொழுது திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று ஆளுநர் தேசிய கொடியை ஏற்ற வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதனை அடிப்படையில் தேசியக்கொடியை ஏற்ற வரும் ஆளுநரை தமிழக முதல்வர் வரவேற்பது மரபாக உள்ளது. அதேபோன்று இந்த விழாவில் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம், வேளாண் துறைக்கான சிறப்பு பதக்கம், கோட்டை அமீர் விருது போன்றவை தமிழக ஆளுநர் கைகளால் வழங்கப்பட உள்ளது.

அதன் அடிப்படையில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு நிலவிவரும் இடையே பிரச்சனை தொடருமே ஆனால் குடியரசு தின விழாவிலும் சர்ச்சை உண்டாகும் என தெரிகிறது. இதனை ஆளும் திமுக அரசு தரப்பும் விரும்பவில்லை. இதனால் தமிழக ஆளுநர் உடனான மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சில மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மூலம் இணக்கமான சூழல் உண்டாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்று வந்த தமிழக ஆளுநர் திமுக அமைச்சர்கள் பலர் மீது உள்ள ஊழல் புகார்கள் மற்றும் ஊழல் வழக்குகள் குறித்து மத்திய அரசுடன் விவாதித்துள்ளார். இதனால் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்களுக்கு நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக குடியரசு தின விழாவிற்குள் தமிழக ஆளுநரை சமாதானம் செய்து இணக்கமான சூழல் உண்டாக்க திமுக தரப்பு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
DMK appeasing the TN Governor for the Republic Day celebrations