திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக! கோட்டைக்கு போய் 10 வருஷமாச்சு..! திமுகவுக்கு தேமுதிக ஓகே சொல்ல இதுதான் காரணம்!
DMDK joins DMK alliance It been 10 years since we went to the fort This is the reason why DMDK said OK to DMK
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நீண்டநாள் எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேமுதிக திடீரென திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இரு கட்சிகளும் கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரே அணியில் செயல்பட உள்ளன என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக நடந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிக, அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது. அப்போது பிரேமலதா விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து உள்மட்ட ஆலோசனைகள் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாநிலங்களவை (ராஜ்யசபா) இடம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தேமுதிக தரப்பு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சந்திப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் கலந்துரையாடியதைத் தொடர்ந்து கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
முன்னதாக கோவையில் நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்வில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் பிரேமலதா ஒரே மேடையில் இருந்தது தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இணையலாம் என்ற யூகங்களை உருவாக்கியது. ஆனால் அந்த வாய்ப்பு இறுதியில் அமையவில்லை.
திமுக தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டணியறிவிப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த முடிவு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப எடுக்கப்பட்டதாக பிரேமலதா தெரிவித்தார். தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசியல் வட்டாரங்களில் பரவும் தகவலின்படி, தேமுதிக குறைந்தபட்சம் 3 முதல் 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு பெறலாம் என கூறப்படுகிறது. மேலும், மாநிலங்களவை இடம் வழங்கப்படலாம் என்ற சாத்தியமும் பேசப்படுகிறது.
2011 தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தொடர்ந்து தோல்விகளை சந்தித்த தேமுதிக கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத சூழ்நிலையை எதிர்கொண்டது. இதுவரை தேமுதிக சார்பில் யாரும் மக்களவை அல்லது மாநிலங்களவைக்கு செல்லாத நிலையில், இந்த கூட்டணி மூலம் சட்டமன்ற உறுப்பினர்களையும், முதன்முறையாக ஒரு எம்பி பதவியையும் பெறலாம் என்ற அரசியல் கணக்கீடு தேமுதிக தரப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கூட்டணி 2026 தேர்தல் அரசியல் சமன்பாடுகளில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது வரவிருக்கும் தொகுதி பங்கீடு அறிவிப்புகள் மற்றும் தேர்தல் பிரச்சார நகர்வுகளின் அடிப்படையில் தெளிவாகும்.
English Summary
DMDK joins DMK alliance It been 10 years since we went to the fort This is the reason why DMDK said OK to DMK