வாய்ப்பு வழங்கப்படாததால் அண்ணாமலை, சரத்குமார் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி: தென் மாவட்டங்களில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் கலக்கம்..!
Annamalai and Sarathkumar Supporters Deeply Disgruntled Over Denial of Opportunities
அதிமுக கூட்டணியில் பாஜ இணைவதற்காக இருந்தால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த அழுத்தம் காரணமாக பாஜ மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக நியமிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
ஏனெனில் நயினார் அதிமுகவில் இருந்து வந்தவர் என்பதால் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவியாக இருக்கும் என்றும் கருதப்பட்டது. இதனையடுத்து அதிமுக - பாஜ கூட்டணி உருவானது. ஏற்கனவே, பாஜ கூட்டணியில் இருந்த பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணியில் தொடர்கிறது. இந்நிலையில் சமீபத்தில் பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தனது கட்சியை கலைத்துவிட்டு பாஜவில் இணைந்த நடிகர் சரத்குமார் மற்றும் அண்ணாமலை ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக, நடிகர் சரத்குமார் தனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்காவிட்டாலும், தன்னை நம்பி பாஜவில் இணைந்த தனது ஆதரவாளர்கள் 05 பேருக்காவது வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
தெற்கு மற்றும் கொங்கு மண்டலங்களில் தனது ஆதரவாளர்களுக்கு சீட் வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். ஆனால், அவரது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அத்துடன், முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை ஆதரவு மாவட்ட தலைவர்கள் யாருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக அண்ணாமலை பாஜ மாநில தலைவராக பொறுப்பேற்றபின்புதான் கிராமங்கள் வரை அக்கட்சி கொண்டு செல்லப்பட்டது. அவரது தலைமைக்கு பின்புதான் தமிழகத்தில் பாஜ வேகமாக வளர்ந்தது என கட்சிக்காரர்கள் கூறி வந்தனர். ஆனாலும், அவரது வளர்ச்சியை விரும்பாத மூத்த தலைவர்கள் உள்ளிட்ட சிலர் எடப்பாடி பழனிசாமியை பயன்படுத்தி பதவியை பறித்ததாக விமர்சனமும் உண்டு.
இதன் காரணமாக, அண்ணாமலையை நம்பி பாஜவில் இணைந்த இளைஞர்கள் அனைவரும் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், சரத்குமாருடன் பாஜவில் இணைந்தவர்களும் தாங்களும், தங்கள் தலைவரும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், அண்ணாமலை மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோரை சமாதானப்படுத்தும் முயற்சியில் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜ பொறுப்பாளருமான பியூஸ் கோயல் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, சமாதான முயற்சிக்கு பின்னர் சரத்குமார், அண்ணாமலை ஆகியோர் தேர்தல் பிரசாரத்திற்கு வருவார்களா என்று அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஒருவேளை இருவரின் ஆதரவாளர்களும் தேர்தல் பணியை பார்க்காமல் புறக்கணித்தால் என்ன செய்வது என தென்மாவட்டங்களில் அதிமுக, பாஜ கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் கலக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Annamalai and Sarathkumar Supporters Deeply Disgruntled Over Denial of Opportunities