தீபாவளி விடுமுறை உற்சாகம்! சென்னையிலிருந்து 20 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் புறப்பாடு...! பயணிகள் பெரும் திரள்!
Diwali holiday excitement 20 thousand special buses depart from Chennai Huge crowd passengers
வருகிற திங்கட்கிழமை (அக்டோபர் 20) தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களுடன் தீபாவளி விடுமுறை இணைந்ததால், பலருக்கு மூன்று நாள் நீண்ட விடுமுறை கிடைத்துள்ளது. இதை சிறப்பாகக் கொண்டாடும் நோக்கில் பலர் கூடுதலாக இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்து, சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்கள்.

சென்னையில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான வெளிமாவட்ட மக்கள் பண்டிகையை உறவினர்களுடன் கொண்டாடும் நோக்கில் நேற்று முன்தினம் முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இதையொட்டி, தமிழக அரசு போக்குவரத்துத் துறை மொத்தம் 20,378 சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.
அதில், சென்னையிலிருந்து மட்டும் 14,268 பஸ்கள் கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் புறநகர் பஸ் நிலையங்களிலிருந்து இயக்கப்படுகின்றன.மேலும், போக்குவரத்துத் துறை வெளியிட்ட தகவலின்படி, நேற்று நள்ளிரவு (17.10.2025) நிலவரப்படி வழக்கமான 2,092 பஸ்களுடன், மேலும் 1,975 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் (அக்டோபர் 16 மற்றும் 17) மொத்தம் 6,920 பஸ்களில் 3,59,840 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதுவரை 1,39,400 பயணிகள் முன்பதிவு செய்து பஸ்களில் இடம் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல், இன்று (சனி) மற்றும் நாளை (ஞாயிறு) மேலும் 1.5 லட்சம் பயணிகள் அரசு பஸ்களில் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Diwali holiday excitement 20 thousand special buses depart from Chennai Huge crowd passengers