பால் விலை உயர்வில் அதிருப்தி... 'ஆவினுக்கு பால் இல்லை' என தமிழக விவசாயிகள் சங்கம் பகீர் அறிவிப்பு...!
Dissatisfaction increase milk prices There no milk soul declares Tamil Nadu Farmers Association
தமிழகத்தில் பால் உற்பத்தியை நம்பி வாழும் லட்சக்கணக்கான விவசாயிகளின் எதிர்பார்ப்பை தமிழக அரசின் புதிய பால் கொள்முதல் விலை அறிவிப்பு ஏமாற்றமடையச் செய்துள்ளதாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சின்னசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,"தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து வெளியிட்ட அறிவிப்பு, பால் உற்பத்தியாளர்களுக்கு எந்த வகையிலும் போதுமானதாக இல்லை.

கடந்த 5 ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உயர்வு விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது.கால்நடைகளுக்கான தீவன விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல், தொழிலாளர்களுக்கான கூலி, கால்நடை மருத்துவச் செலவு, பராமரிப்புச் செலவு உள்ளிட்ட உற்பத்தி சார்ந்த அனைத்து செலவுகளும் உயர்ந்துள்ளன.
இத்தகைய சூழலில் பால் கொள்முதல் விலையை வெறும் ரூ.1 மட்டும் உயர்த்தியிருப்பது விவசாயிகளுக்கு நியாயமான பலனை வழங்காது. எனவே, இந்த விலை உயர்வு போதுமானதல்ல என்பதுடன், கண்டனத்திற்குரியதாகவும் உள்ளது.கறவை மாடுகளின் பராமரிப்பு செலவு மற்றும் பாலின் தரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
பசும்பாலில் 4 சதவீத கொழுப்புச் சத்தும், 8 சதவீத இதர சத்துகளும் இருக்கும் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் சிறப்பாக செயல்படுவதற்கு 5 சதவீத மார்ஜின் தொகை வழங்கப்பட வேண்டும்.
இதன்மூலம் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதுடன், பால் உற்பத்தியாளர்களுக்கும் உரிய ஆதரவு கிடைக்கும்.தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்குத் தேவையான பால் முழுமையாக கிடைக்காத நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பால் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக வெளிமாநிலங்களில் இருந்து பால் பவுடர், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி பாலுடன் கலந்து விற்பனை செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும்.
அதற்கு பதிலாக தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க தேவையான திட்டங்களை செயல்படுத்தி, உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து அதிக அளவில் பால் கொள்முதல் செய்ய வேண்டும். இதன்மூலம் பால் உற்பத்தியாளர்களின் வருமானத்தை உயர்த்துவதுடன், ஆவின் நிறுவனத்தின் பால் தேவையையும் தமிழகத்திலேயே பூர்த்தி செய்ய முடியும்.
பால் உற்பத்தியாளர்களின் தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பசும்பால் ஒரு லிட்டருக்கு ரூ.50-ம், எருமைப்பால் ஒரு லிட்டருக்கு ரூ.60-ம் வழங்க வேண்டும்.
உற்பத்திச் செலவுக்கு ஏற்ற வகையில் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டால்தான் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும்.எங்களது கோரிக்கையை அரசு உடனடியாக பரிசீலித்து பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
இல்லையெனில், ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவதை நிறுத்தும் முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு பால் உற்பத்தியாளர்கள் தள்ளப்படுவார்கள் என தெரிவிக்கிறோம்.இவ்வாறு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சின்னசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Dissatisfaction increase milk prices There no milk soul declares Tamil Nadu Farmers Association