கிருஷ்ணகிரியில் 1,000 ஆண்டுகள் பழமையான முதலாம் ராஜேந்திர சோழன் காலத்து அரிய நடுகல் கண்டுபிடிப்பு..! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஒட்டப்பட்டி கிராமம், பெணுகொண்டாபுரம் ஏரிக்கரையில் சுமார் சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான முதலாம் ராஜேந்திர சோழன் காலத்து அரிய நடுகல் மற்றும் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் சங்கம், கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் மற்றும் தமிழகத் தொல்லியல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன. இந்த ஆய்வின் போது மத்தூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவக்குமார், வரலாற்று ஆய்வுச் சங்க செயலர் தமிழ்ச்செல்வன், துணைச் செயலர் பாலாஜி மற்றும் ஊர்மக்கள் உடனிருந்தனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ் கூறுகையில்; 

"கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்து நடுகல் ஏற்கனவே அனுசோனை, கங்காவரம் ஆகிய இரு இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளன என்றும், தற்போது கண்டறியப்பட்டுள்ளது 03-வது நடுகல் என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, முதலாம் ராஜேந்திர சோழனின் 24-ஆம் ஆட்சியாண்டில் (பொது ஆண்டு 1036), 'இராஜேந்திரசோழ எயிநாடுடையான்' என்ற குறுநிலத் தலைவன், தனது பகுதியின் ஆநிரைகளையும் (கால்நடைகள்) நிலப்பகுதியையும் கவர வந்த எதிரியான 'பொன்னன்' என்பவனுடன் போரிட்டு, அவனைக் கொன்று தானும் வீரமரணமடைந்துள்ளான்.

போரிட்ட இருவருமே 'ராஜேந்திர சோழன்' என்ற பட்டப் பெயரைத் தாங்கியுள்ளனர். இதன் மூலம் சோழர் காலத்தில் இப்பகுதி நேரடியாக அல்லாமல், சோழர்களின் பட்டம் தாங்கிய குறுநிலத் தலைவர்களால் ஆளப்பட்டதும், அவர்களுக்குள் அடிக்கடி எல்லைப் பூசல்கள் நிகழ்ந்ததும் தெரிய வருகிறது என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த நடுகல்லில் வீர மரணமடைந்த தலைவனின் வீரமும், அவனது மறைவுக்குப் பின் மனைவி தீக்குளித்த (சதி) காட்சியும், தேவமகளிர் தலைவனை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சியும் பல்லக்கு, கொடி கம்பங்களுடன் செதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Discovery of a Rare 1000 Year Old Hero Stone from the Era of Rajendra Chola I in Krishnagiri


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->