சீனா, வியட்நாமில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி கப்பல் சேவை: வந்தடைந்தது முதல்கட்ட சரக்குக் கப்பல்...!
Direct shipping service from China and Vietnam to Thoothukudi First cargo ship arrives
சீனா மற்றும் வியட்நாம் நாடுகளுடன் தமிழகத்தின் கடல்வழி வர்த்தகத் தொடர்பை வலுப்படுத்தும் வகையில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு நேரடி சரக்கு கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக, சீனாவில் இருந்து புறப்பட்ட சரக்கு பெட்டக கப்பல் முதன்முறையாகத் தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தப் புதிய சேவை மூலம் சரக்குப் போக்குவரத்து மேம்படுவதுடன், பல்வேறு தொழில் துறைகளுக்கும் கூடுதல் வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,"சீனா, வியட்நாம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கில், ரீஜினல் கண்டெய்னர் லைன் நிறுவனம் சார்பில் புதிய நேரடி கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவையின் கீழ், சீனா மற்றும் வியட்நாம் வழியாகத் தூத்துக்குடிக்கு சரக்கு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. இதன் முதல்கட்டமாக, எம்.வி. நவதா பூம் என்ற சரக்கு பெட்டக கப்பல் நேற்று முதன்முறையாகத் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது. அந்தக் கப்பலுக்கு துறைமுக அதிகாரிகள் மற்றும் சரக்கு பெட்டக முனையப் பொறுப்பாளர்கள் வரவேற்பு அளித்தனர்.147.82 மீட்டர் நீளமும், 23.38 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல், ஒரே நேரத்தில் 1,100 சரக்கு பெட்டகங்களைக் கையாளும் திறன் பெற்றதாகும்.
சீனாவின் கின்ஷோ துறைமுகத்தில் இருந்து புறப்படும் இந்தக் கப்பல், வியட்நாமின் ஹைபோங் துறைமுகம் வழியாகத் தூத்துக்குடியை வந்தடைகிறது. பின்னர், காட்டுப்பள்ளி துறைமுகத்துக்குச் சென்று, அங்கிருந்து வியட்நாமின் சூலாய் துறைமுகத்தை அடைகிறது. தொடர்ந்து, சீனாவின் கின்ஷோ துறைமுகத்துக்குத் திரும்புகிறது.சீனாவின் கின்ஷோ துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடியை வந்தடைய 13 நாட்கள் ஆகின்றன.
வியட்நாமின் ஹைபோங் துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வர 12 நாட்கள் தேவைப்படுகின்றன.தற்போது இந்தச் சரக்கு கப்பல் சேவை வாரத்துக்கு இருமுறை இயக்கப்படுகிறது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் தேவையைப் பொறுத்து, எதிர்காலத்தில் கப்பல் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கடல்வழிப் போக்குவரத்து வசதியால், தென்சீனா மற்றும் வியட்நாம் நாடுகளுடனான தூத்துக்குடி துறைமுகத்தின் வர்த்தகத் தொடர்பு மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சூரிய மின்தகடுகள் தயாரிப்பு, மின்சார வாகன உற்பத்தி உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில் துறைகளுக்கு மூலப்பொருட்களைக் கொண்டு வருவதற்கும், தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கும் கூடுதல் வாய்ப்புகள் உருவாகும்.
இதன் மூலம் தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கும் தூத்துக்குடி துறைமுகம் மேலும் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Direct shipping service from China and Vietnam to Thoothukudi First cargo ship arrives