செப்டம்பர் 15-ல் தொடங்கவில்லையா...? 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் புதிய தொடக்க தேதி இதுதான்...! - Seithipunal
Seithipunal


அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் திட்டமிட்டபடி செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் வெளிநாட்டு பயணம் காரணமாக, திட்டத்தின் தொடக்கம் வேறு தேதிக்கு மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பை ஊக்குவிக்கும் நோக்கில், கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார்.

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி இத்திட்டம் தொடங்கப்படும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.இதன்படி, கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி பெற்றவர்களாக கருதப்படுகின்றனர். தகுதியான குழந்தைகளுக்கு 22 கேரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு கிராம் எடையுள்ள தங்க மோதிரம் தாய்மாமன் சீராக வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக அடுத்த ஓராண்டுக்கு ரூ.755 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை தயாரிக்க ஆர்டரும் வழங்கப்பட்டுள்ளது.தங்க மோதிரங்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் 70 சதவீத பணிகளையும், கல்யாண் ஜூவல்லரி நிறுவனம் 30 சதவீத பணிகளையும் மேற்கொள்ள உள்ளன.திட்டம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 15-ந் தேதியில் திட்டத்தை தொடங்கி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் லண்டன் பயணமே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் நாளை வியாழக்கிழமை லண்டனுக்கு புறப்படும் முதல்-அமைச்சர், சென்னையில் இருந்து துபாய் சென்று, பின்னர் அங்கிருந்து லண்டன் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பயணத்தின்போது சில்வர்ஸ்டோனில் நடைபெறும் நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயத்தையும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நேரில் பார்வையிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது வெளிநாட்டு பயணம் 16-ந் தேதி வரை 7 நாட்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது.

இதனால், செப்டம்பர் 15-ந் தேதி சென்னையில் இருந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைப்பது சாத்தியமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.இந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 25-ந் தேதி ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தாய்மாமன் சீர் வழங்கும் பாரம்பரிய நடைமுறை பிரபலமாக இருப்பதால், இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சிக்கு உசிலம்பட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் நிலையில், திட்டத்தின் தொடக்க தேதி குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 16-ந் தேதி இரவு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.அதற்கு மறுநாளான செப்டம்பர் 17-ந் தேதி விருதுநகரில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அவர் படித்த பள்ளியில் ‘காமராஜர் காலை உணவுத் திட்ட’ விரிவாக்கத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. இதனால் முதலில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, அதன்பிறகு விருதுநகருக்கு சென்று காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, செப்டம்பர் 15-ந் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 25-ந் தேதி ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Didnt it start September 15th This new start date Thaimaman Gold Ring project


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->