தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள்...! இந்து முன்னணி பிரமாண்ட விழா ஏற்பாடு...!
1point5 lakh Ganesha idols across Tamil Nadu Hindu front organizes grand function
வருகிற 14-ம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு நடத்த இந்து முன்னணி அமைப்பு தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாகவும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும் நடத்துவதற்கான பணிகள் பல்வேறு மாவட்டங்களில் வேகமெடுத்துள்ளன.

நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதுகுறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்ததாவது,"தமிழகத்தின் நகர்ப்புறங்கள், கிராமங்கள் என அனைத்து பகுதிகளிலும் மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி சிறப்பு வழிபாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகள் தொடர்பாக அந்தந்த மாவட்ட அமைப்பாளர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் நிகழ்ச்சிகள் மற்றும் சிலை கரைப்பு ஊர்வலங்களை நடத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரசாயனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விழா நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், சிலை கரைப்பு தொடர்பான பணிகளையும் முறையாக மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 5 ஆயிரத்து 501 இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளன.இதையொட்டி எர்ணாவூர் பகுதியில் பிரமாண்ட விநாயகர் சிலைகளை உருவாக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் வள்ளுவர் கோட்டம், திருவல்லிக்கேணி, வடசென்னை, கொட்டிவாக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளிலும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் காப்பு கட்டி சிறப்பு விரதம் மேற்கொள்ளும் நிகழ்வுகளும் தொடங்கியுள்ளன. தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் சிலைகள் நிறுவுதல், வழிபாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் ஊர்வலங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
English Summary
1point5 lakh Ganesha idols across Tamil Nadu Hindu front organizes grand function