GST சீர்திருத்தங்களை வரவேற்கும் தீர்மானம்..புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Decision to welcome GST reforms Passed in the Puducherry Legislative Assembly
56-வது GST கவுன்சில் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க GST சீர்திருத்தங்களை வரவேற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் அறிவித்த வரலாற்று சிறப்புமிக்க அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை இந்த அவை வரவேற்கிறது. மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற 56-வது GST கவுன்சில் கூட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த GST சீர்திருத்தங்கள் கொண்டு வந்துள்ளதை மிகவும் வரவேற்புடையதாக இந்த அவை கருதுகிறது. இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் 'எளிமையான வரி முறை', 'குடிமக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரம்', 'நுகர்வு மற்றும் வளர்ச்சிக்கு ஊக்கம்', 'வணிகம் செய்வதை எளிதாக்குவதன் மூலம் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை ஊக்குவித்தல்' மற்றும் 'வளர்ந்த இந்தியாவிற்கான கூட்டுறவு கூட்டாட்சியை வலுப்படுத்துதல்' என்ற "பஞ்சரத்னா"வை நாட்டின் பொருளாதாரத்தில் ஒருங்கிணைப்பதற்கான மாண்புமிகு பிரதமரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் உறுதிப்பாட்டை நிறைவேற்றுகிறது.
சாமானிய மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கவும், GST-யை எளிமையாகவும் நியாயமாகவும் ஆக்க பிரதமர் எடுத்த முடிவை இந்த அவை ஏற்றுக்கொண்டு ஆதரிக்கிறது. மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் அறிவித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த GST சீர்திருத்தங்களின் மூலம் இது நடைமுறைக்கு வந்துள்ளது.
GST வரி விகிதங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த பெரும் வரிக் குறைப்பு சாமானியர்கள், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வெகுவாக பயனளிக்கும். மாண்புமிகு பிரதமரால் புகழப்பட்டது போல் இந்த சீர்த்திருத்தங்கள் சிறு வணிகர்கள் உட்பட அனைவருக்கும் வணிகம் செய்வதை எளிதாக்கும்.
GST வரி விகிதங்களை 5% மற்றும் 18% என இரண்டே வரி விகிதங்களாக எளிமையாக்கவும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகளைக் குறைக்கவும் எடுக்கப்பட்ட முடிவை இந்த அவை வரவேற்கிறது. 18% மற்றும் 12% போன்ற அதிக வரி விதிப்பில் இருந்த சுமார் 331 பொருட்கள் 5% வரி விதிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் 34 பொருட்களுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சோப்பு மற்றும் பற்பசை போன்ற தினசரி உபயோக பொருட்களுக்கு இப்போது 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமும், ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டிற்க்கு முழு வரி விலக்கும், மேலும் சிறிய கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள், தொலைக்காட்சிப்பெட்டி, குளிர் சாதனப்பெட்டி மற்றும் சிமென்ட் ஆகியவற்றுக்கு GST வரி 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. விவசாய இயந்திரங்கள் மற்றும் நீர்ப்பாசன உபகரணங்களுக்கு 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்.
இந்த சீர்திருத்தம், நிலையான வருவாய் வளர்ச்சி மூலம் மாநிலங்களை வலுப்படுத்தும் அதே நேரத்தில் அனைத்து குடும்பங்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இது நேரடியாக பயனளிக்கும் என்பதை இந்த அவை கருத்தில் கொண்டு பாராட்டுகிறது. GST நடைமுறைகளை எளிதாக்குவதின் மூலமும் GST வரி விகிதங்களை சீரமைப்பது மற்றும் வரி விகிதங்களை குறைப்பதின் மூலமும் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம் அனைத்து குடிமக்களுக்கும் மற்றும் வணிகத்திற்கும் ஏற்றதாகவும் அமையும்.
இதனடிப்படையில், 56-வது GST கவுன்சில் கூட்டத்தின் முடிவுகளை வரவேற்று இந்த அவை அதனை ஆதரிக்க தீர்மானிக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்களை கொண்டு வந்த மாண்புமிகு பிரதமர், மத்திய நிதியமைச்சர் மற்றும் GST கவுன்சிலின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த அவை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல், வரிகளை எளிமைப்படுத்துதலின் மூலம் “விக்ஸித் பாரத்” இலக்கினை அடைவதற்கான மாண்புமிகு பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை இந்த அவை பாராட்டுகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத்தால், இந்த தீர்மானம் இந்த நாளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
English Summary
Decision to welcome GST reforms Passed in the Puducherry Legislative Assembly