"சிவி சண்முகம் கட்சி மாற மாட்டார்... மாற வேண்டியது அதிமுக தலைமையே" - சிவி சண்முகம் ஆதரவாளர் பரபரப்பு பேட்டி - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது ஆதரவாளரான சுரேஷ்பாபு முக்கிய விளக்கமளித்துள்ளார். "சி.வி. சண்முகம் கட்சி மாற மாட்டார். அதிமுகவிலேயே தொடர்வார். ஆனால் கட்சியின் தலைமை மாற்றப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அருகே சகாதேவன்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் கோலியனூர் ஒன்றியச் செயலாளரும், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட விஜயாவின் கணவருமான சுரேஷ்பாபு, கட்சியின் தற்போதைய நிலை குறித்து விரிவாக பேசினார்.

அப்போது அவர், 1991 முதல் கிளைச் செயலாளர், மாணவர் அணி ஒன்றியச் செயலாளர், மாவட்டப் பேரவை துணைச் செயலாளர், ஊராட்சிமன்றத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியதாகவும், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவுக்காக தொடர்ந்து உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் தனது மனைவி விஜயாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு நன்றி தெரிவித்த அவர், அந்தத் தேர்தல் தோல்வி இயல்பான தோல்வி அல்ல; கட்சிக்குள் இருந்த சிலரின் செயல்பாடுகளே தோல்விக்கு காரணம் என்று குற்றம்சாட்டினார்.

மேலும், தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு நடத்தும்போது போட்டியிட்ட வேட்பாளர்களின் கருத்துகளைக் கூட கேட்கவில்லை என்றும், சில நிர்வாகிகள் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு முழுமையான ஆதரவு வழங்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பசுபதி குறித்தும் கருத்து தெரிவித்த சுரேஷ்பாபு, சி.வி. சண்முகத்தின் ஆதரவால் அரசியலில் உயர்ந்தவர் பின்னர் அவருக்கே எதிராக செயல்பட்டார் என்று குற்றம்சாட்டினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமையையும் விமர்சித்த அவர், "தற்போதைய தலைமையின் கீழ் கட்சி தொடர்ந்தால் மேலும் பாதிக்கப்படும். தமிழகம் முழுவதும் தொண்டர்கள் தலைமை மாற்றத்தை விரும்புகின்றனர். தற்போதைய தலைமையைத் தவிர வேறு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்" என்றார்.

அதேநேரத்தில், சி.வி. சண்முகத்தை பொதுச்செயலாளராக முன்மொழிவதில்லை. அவர் அந்தப் பதவியை விரும்புபவரும் அல்ல என்றும் சுரேஷ்பாபு விளக்கம் அளித்தார்.

சிவி சண்முகம் கட்சி மாறுவார் என்ற தகவல்களுக்கு பதிலளித்த அவர், "கட்சியை விட்டு விலகும் எண்ணம் எனக்கோ, எனது ஆதரவாளர்களுக்கோ இல்லை. 'ஒரே கட்சி, ஒரே கோஷ்டி' என்ற நிலைப்பாட்டில்தான் தொடர்ந்து அதிமுகவில் இருப்போம். சிவி சண்முகமும் கட்சி மாற மாட்டார். மாற வேண்டியது அதிமுக தலைமையே" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும், தான் கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யென யாராவது நிரூபித்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும், கட்சியின் எதிர்கால நலனுக்காக தலைமை மாற்றம் அவசியம் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CV Shanmugam will not switch parties it is the AIADMK leadership that needs to change CV Shanmugam supporter sensational statement


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->