பரபரப்பு...! காஞ்சிபுரத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்த பசுமாடு... ஜே.சி.பி. மூலம் பத்திரமாக மீட்பு...!
cow fell into underground sewer Kanchipuram Rescued safely by JCB
காஞ்சிபுரம் மாநகராட்சியில் நீண்டகாலமாக நிலவி வந்த பாதாள சாக்கடை வசதி குறைபாட்டை சரிசெய்யும் வகையில், பல்வேறு பகுதிகளில் புதிய இணைப்புகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாததால் பசுமாடு ஒன்று அதில் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் 40 வார்டுகளுக்கு கடந்த 1978-ம் ஆண்டிலேயே பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 11 வார்டுகள் முன்பு ஊராட்சிகளாக இருந்து பின்னர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளாகும்.
அங்கு பாதாள சாக்கடை வசதி இல்லாததால், புதிய இணைப்புகள் அமைக்கும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதற்காக ரூ.254 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், உலக வங்கியின் நிதியுதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 180.243 கிலோமீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் பிரதான குழாய்கள் மட்டும் 14.101 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகின்றன.
மேலும், பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில், 9 மீட்டர் இடைவெளிக்கு ஒன்று என்ற அடிப்படையில் மேல்நோக்கி அமைக்கப்படும் ஆளிறங்கும் குழாய்கள் மொத்தம் 7,437 இடங்களில் அமைக்கப்பட உள்ளன.
இதன் மூலம் 15,652 வீடுகளுக்கு புதிய பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகள் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் 48-வது வார்டுக்கு உட்பட்ட வர்த்தமான் நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாமல் இருந்ததாக தெரிகிறது.
அந்த வழியாக சென்ற பசுமாடு ஒன்று, எதிர்பாராதவிதமாக பள்ளத்திற்குள் தவறி விழுந்தது.பள்ளத்தில் சிக்கிய பசுமாட்டை மீட்க அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் போராடினர். பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டபோதும் பசுமாட்டை உடனடியாக வெளியே கொண்டுவர முடியவில்லை.
இதையடுத்து இயந்திரம் வரவழைக்கப்பட்டு, அதன் உதவியுடன் பள்ளத்தில் சிக்கியிருந்த பசுமாடு பத்திரமாக மீட்கப்பட்டது.இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, பள்ளத்தை சுற்றிலும் மாநகராட்சி ஊழியர்கள் தடுப்புகளை அமைத்து, பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் அந்த பகுதிக்குள் செல்லாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
English Summary
cow fell into underground sewer Kanchipuram Rescued safely by JCB