புதுச்சேரியில் இருந்து தமிழக டாஸ்மாக் கடைக்கு போலி மதுபானம் கடத்தல்..அமலாக்கத்துறை விசாரணை கோரும் அதிமுக!
Counterfeit liquor smuggling to Tamil Nadu TASMAC shop from Puducherry AIADMK demands investigation by the enforcement department
கடந்த 10 தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து போலியாக மதுபானம்தயாரிக்கப்பட்டு தமிழக டாஸ்மாக் கடைக்கு அனுப்பப்பபட்ட வழக்கு சம்பந்தமாக அமலாக்கத்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசால் விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் மதுபானங்கள் புதுச்சேரி மாநிலத்தில் போலியாக தயாரிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களால் அதே டாஸ்மாக்கில் புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட போலி மதுபானம் விற்பனை செய்யப்படுகின்றது. புதுச்சேரியில் இருந்து தினசரி குறைந்தது ஒருகோடி ரூபாய்க்கு மேல் போலி மதுபானம் தயாரிக்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு ஒருகோடி என்றால் மாதத்திற்கு 30 கோடி ஆண்டுக்கு சுமார் 400 கோடி ரூபாய் அளவிற்கு புதுச்சேரியில் இருந்து போலியாக மதுபானம் தயாரித்து கடத்தப்படுகின்றது.
கடந்த 10 தினங்களுக்கு முன்பு இவ்வாறு கடத்தப்பட்ட போவி டாஸ்மாக் மதுபானம் புதுச்சேரியில் இருந்து தயாரிக்கப்பட்டது தமிழக கலால்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்பந்தமான வழக்கு யார் யார் மீது பதிவு செய்துள்ளனர் என்பது தெரியவில்லை. தற்போது தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் தமிழக திமுக ஆட்சியாளர்களால் நடத்தப்படும் ஊழல் முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. கடந்த 10 தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து போலியாக தயாரிக்கப்பட்டு தமிழக டாஸ்மாக் கடைக்கு அனுப்பப்பபட்ட வழக்கு சம்பந்தமாக அமலாக்கத்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 7 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் உள்ள ஒட்டைகளை பயன்படுத்தி அரசுக்கு மருத்துவ இடம் கொடுக்காமல் உள்ளனர். மீதமுள்ள 3 தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 650 இடங்களில் 50 சதவீத இடங்களான 325 இடங்கள் அரசுக்கு வழங்க வேண்டும். ஆனால் இதுவரை ஆட்சியில் உள்ளவர்கள் அதை பெறாமல் புதுச்சேரி மாணவர்ளை வஞ்சித்து வருகின்றனர். தொடர்ந்து இந்த ஆண்டும் அதே நிலை நீடிக்கிறது. முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் அரசுக்கு தேவையான 50 சதவீத இடங்களை தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் இருந்து பெறாமல் கல்லூரி நிர்வாகத்தை அழைத்து பேசி வருவது தேவையற்ற ஒன்றாகும். தேசிய மருத்துவ கவுன்சிலின் ஆணைப்படி தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீதமான இடங்களை கட்டாயமாக அரசுக்கு வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். புதுச்சேரியில் ஆளும் கடந்தகால திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் 50 சதவீதமான இடங்களை பெறாமல் 36 சதவீத இடங்களை பெறுவது தவறான ஒன்றாகும்.
ஏற்கனவே துணைநிலை ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் அரசுக்குரிய 50 சதவீத இடங்களை பெற முயற்சிகளை எடுத்து வந்தார். அதே போல் தற்போது உள்ள துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்கள் அரசுக்கு கொடுக்க வேண்டிய 50 சதவீத மருத்துவ இடங்களை தனியார் மருத்துவ கல்லூரிகளில் இருந்து பெற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மாநில அந்தஸ்து சம்பந்தமாக சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஒரு சில முயற்சிகளை எடுத்து வருகிறார். அது பாராட்டுக்குரிய ஒன்று. ஆனால் மத்தியில் எந்த தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தாலும் புதுச்சேரி மாநிலத்திற்கு தொடர்ந்து மாநில அந்தஸ்து வழங்காமல் துரோகத்தை இழைத்து வருகிறது. மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தும் புதுச்சேரியில் அதே நேரத்தில் காங்கிரஸ் திமுக ஆட்சி இருந்த போதும் மாநில அந்தஸ்து கொடுக்கப்படாமல் இருந்தது. தற்போது மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில் பாஜக கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் நடந்து வரும் நிலையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க முடியாது என மத்திய பாஜக அரசு தெளிவாக கூறியுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர்கள் நாராயணசாமி, வைத்திலிங்கம் ஆகியவர்கள் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் கொடுக்கும் விண்ணப்பத்திற்கு கையெழுத்து போட்டுள்ளனர். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது மாநில அந்தஸ்து பெற்று தராதவர்கள் தற்போது மாநில அந்தஸ்திற்காக கையெழுத்து போடுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். துளிகூட வெட்கமே இல்லாமல் கையெழுத்து இடுகின்றனர். இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள். மாநில அந்தஸ்து பெறுவது என்பது அதிமுக கொள்கையாகும். மாநில அந்தஸ்துக்காக மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா அவர்களின் காலத்தில் இருந்து மாண்புமிகு எடப்பாடியார் காலம் வரை பந்த் போராட்டம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை அதிமுக முன்னெடுத்து நடத்தியுள்ளது. மாநில அந்தஸ்து பெறுவது ஒன்று மாநில வளர்ச்சிக்கான தீர்வாகும் என புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Counterfeit liquor smuggling to Tamil Nadu TASMAC shop from Puducherry AIADMK demands investigation by the enforcement department