தனுஷ்கோடியில் 'ராம் யாத்ரா' நாட்டியாஞ்சலி: குழந்தைகளுடனான காவி உடை நிகழ்ச்சிக்கு கி.வீரமணி, திருமுருகன் காந்தி கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் அபிநய நாட்டியாஞ்சலி அறக்கட்டளை இணைந்து இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் 'ராம் யாத்ரா' என்ற தலைப்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தியுள்ளன. இந்நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் காவி உடையில் ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் வேடமணிந்து பங்கேற்றனர். மாநில அரசின் சுற்றுலாத் துறை சார்பில் 'ராம் யாத்ரா' என்ற பெயரில் ஆன்மிக நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்பதால், இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பலத்த கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

கி. வீரமணியின் கடும் கண்டனம்:

திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்ட அறிக்கையில், "கொளுத்தும் வெய்யிலில் பிஞ்சுக் குழந்தைகளைக் காவி உடையில் நிற்க வைத்துத் துன்புறுத்திய அதிகாரிகள் யார்? இதற்கு அனுமதி அளித்த பின்னணி என்ன?" என வேதனை தெரிவித்துள்ளார். மேலும், சுற்றுலாத் துறை சார்பில் காவி உடை அணிந்து ராம் யாத்ரா நடத்த வேண்டிய அவசியம் என்ன என்றும், மதவெறியைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வின் பாதையில் தவெக அரசு பயணிக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சேதுக் கால்வாய்த் திட்டத்தை முடக்கிய புராணக் கதைகளை மீண்டும் கையில் எடுத்து, தமிழ்நாட்டை மதவெறிக் காடாக்க நினைப்போருக்கு ஒத்துழைப்பவர்களை வரலாறு மன்னிக்காது என்றும் எச்சரித்துள்ளார்.

மே 17 இயக்கத்தின் எச்சரிக்கை:

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தனது சமூக வலைதளப் பதிவில், நாகூர் தர்கா, வேளாங்கன்னி மாதா கோயில், ஈரோட்டில் தந்தை பெரியார் மற்றும் மதுரையில் கண்ணகி போன்ற இடங்களுக்கும் கொள்கை அடையாளங்களுக்கும் சுற்றுலாத் துறை இதுபோன்று நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்துமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தனுஷ்கோடி என்பது ஈழத்தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்குமான வரலாற்றுத் தொப்புள்கொடி உறவுப் பாலம் எனக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டை இதிகாசக் குப்பைத் தொட்டியாக மாற்ற நினைத்தால் தவெக அரசு கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Controversy Erupts Over TN Tourism Depts Ram Yatra Event in Dhanushkodi DK and May 17 Movement Strongly Condemn Saffron Attire for Children


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->