ஆயுத பூஜை தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு வரை கட்டணக் கொள்ளை - பயணிகள் கடும் அவதி!
Ayudha Pooja Festival Rush Omni Bus Fares Skyrocket up to 3 Times Passengers Shocked
பண்டிகைக் காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்கதையாகி வருகிறது. வரவிருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு, தென் மாவட்டங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கான ஆம்னி பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தாறுமாறாக உயர்ந்துள்ள கட்டண விவரங்கள்:
வரும் அக்டோபர் 19-ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆயுத பூஜையும், 20-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) விஜயதசமி பண்டிகையும் வருவதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை கிடைக்கிறது. இதனையொட்டி அக்டோபர் 16, 17 தேதிகளில் வெளியூர் செல்லவும், அக்டோபர் 20, 21 தேதிகளில் சொந்த ஊரிலிருந்து திரும்பவும் பொதுமக்கள் பெருமளவில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
வழக்கமாக ரூ.1,200 முதல் ரூ.2,000 வரை வசூலிக்கப்படும் கட்டணங்கள் தற்போது தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளன:
கொடைக்கானல்: ரூ. 4,999 வரை
ஊட்டி: ரூ. 3,500 வரை
நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி: ரூ. 3,500-க்கும் மேல்
மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், கோவில்பட்டி: ரூ. 3,000 வரை
முன்பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்:
கடைசி நேர நெரிசலையும் அதிகக் கட்டணத்தையும் தவிர்க்க எண்ணி 20 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய முயன்ற மக்களுக்கும் இந்த அதிரடி கட்டண உயர்வு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கட்டணம் மிக அதிகமாக இருப்பதால் பலர் தங்களது பயணத் தேதியையே மாற்றிக் கொள்ளும் அல்லது பயணத்தைத் தவிர்க்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க விளக்கம்:
இக்கட்டண உயர்வு குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் அன்பழகன் கூறுகையில், "2024-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டண வரம்பிற்கு உட்பட்டே கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. ஒரு சிலர் விதிகளை மீறி கூடுதலாக வசூலிப்பதால் அனைவருக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது; நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிப்பவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Ayudha Pooja Festival Rush Omni Bus Fares Skyrocket up to 3 Times Passengers Shocked