அடுத்தடுத்து மரணங்கள் | அதிர்ச்சியில் திமுகவினர் - வேதனையில் முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சரும், திமுக வர்த்தக அணித் தலைவருமான எஸ்.என்.எம். உபயதுல்லா மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் இரங்கல் செய்தியில், "திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாகத் தேர்தல் களத்தில் இறங்கிய காலத்தில் இருந்து பேரறிஞர் அண்ணாவின் மீதும் முத்தமிழறிஞர் கலைஞர் மீதும் பெரும் பற்றும் மரியாதையும் கொண்டு கழகப் பணியாற்றி வந்த திரு. உபயதுல்லா அவர்கள், என் மீது மிகுந்த அன்புக் கொண்டிருந்தவர். 1962-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்கள் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்காகச் சிறப்பாகத் தேர்தல் பணியாற்றி அவரது நன்மதிப்பைப் பெற்றவர். மன்னை நாராயணசாமி. கோ.சி.மணி, தஞ்சை நடராஜன் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்தலைவர்களுடன் இணைந்து கழகம் வளர்த்த தீரர்.

1987 முதல் 2014 வரை 27 ஆண்டுகள் தஞ்சை நகரக் கழகச் செயலாளராக இருந்த பெருமைக்குரியவர் உபயதுல்லா அவர்கள். நான்கு முறை தஞ்சை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணி ஆற்றிய உபயதுல்லா அவர்கள் 2006-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஐந்தாவது முறையாகத் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது வணிக வரித்துறை அமைச்சராக அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தமிழறிஞர் மீது மட்டுமல்லாது, தமிழ்மொழி மீதும் காதல் கொண்டிருந்த உபயதுல்லா அவர்கள் முப்பதாண்டுகளுக்கும் மேலாக தஞ்சை முத்தமிழ் மன்றம் என்ற அமைப்பை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது கழகப் பணிகளையும், மக்கள் பணியையும், மொழிப்பற்றையும் சிறப்பிக்கும் வகையில் 2020-ஆம் ஆண்டு கழக முப்பெரும் விழாவில் "கலைஞர் விருதினையும்", இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அரசு விழாவில் தமிழ்நாடு அரசின் "பேரறிஞர் அண்ணா விருதினையும்" எனது கையால் வழங்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தேன்.

கழக நிகழ்ச்சிகளை, கூட்டங்களை எந்த இடர் வந்தாலும் எதிர்கொண்டு திறம்பட நடத்திக்காட்டும் ஆற்றல் பெற்றவர் திரு. உபயதுல்லா அவர்கள். கழகத்தின் மிகப்பெரும் தூணாக, மாறாத கொள்கைப் பற்றாளராக விளங்கிய திரு. உபயதுல்லா அவர்களின் மறைவு கழகத்துக்கும் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டக் கழகத்துக்கும் பேரிழப்பு என்றே கூற வேண்டும். உபயதுல்லா அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று தெரிவித்துள்ளார்.

 

இதேபோல், சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் இளைய சகோதரர் க. மணிவண்ணன் அவர்களின் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இளைய சகோதரர் க. மணிவண்ணன் அவர்கள் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கழகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Stalin Mourning to ex minister and anbaazhagan brother death


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->